அம்மா ஓகே சொல்லிட்டாங்க!.. நண்பர் விஜய்யுடன் இணைந்து அரசியல் செய்ய ரெடியான ராகவா லாரன்ஸ்!..

 
ragava

நடிகர், இயக்குநர் மற்றும் சமூக சேவகராக அறியப்படும் ராகவா லாரன்ஸ், சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் மூலம் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ரசிகர்களிடம் நேரடியாக கருத்து கேட்டுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வீடியோவில் பேசிய லாரன்ஸ், “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற வாசகம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில், உழைப்பிற்கு பலன் கிடைக்க வேண்டாமா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கும் என குறிப்பிட்டார். இதனை விளக்குவதற்காக ஒரு குட்டிக்கதையையும் அவர் பகிர்ந்தார்.

ஒரு பணக்காரரின் வீட்டில் வேலை செய்த இரு வேலைக்காரர்களில் ஒருவர் தன்னுடைய பணியை மட்டுமே நேர்மையாக செய்து வந்தார். மற்றொருவர் முதலாளியை தொடர்ந்து பாராட்டிக் கொண்டே இருந்தார். ஒருநாள் வெளியூருக்கு செல்லும் முதலாளி, பாராட்டு கூறிய வேலைக்காரருக்கு சம்பள உயர்வு வழங்கியதுடன், உண்மையாக வேலை செய்த வேலைக்காரருக்கு வீடு கொடுத்து, தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறினார். “கொடுத்த வேலையைச் செய்தவருக்கே உண்மையான பலன் கிடைத்தது. அதுபோல நம் கடமையை நேர்மையாக செய்தால் கடவுள் நிச்சயம் பலன் கொடுப்பார்” என்று லாரன்ஸ் தெரிவித்தார்.

தனது சமூக சேவைப் பயணம் அரசியலுக்கான அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் கூறினார். கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வந்த காலத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கிய அனுபவம் தான் பொதுமக்கள் மத்தியில் தன்னை மேலும் நெருக்கமாக்கியதாக தெரிவித்தார்.

அரசியல் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்த லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது தானும் அரசியலுக்கு வர விரும்பியதாக கூறினார். அந்த நேரத்தில் ரசிகர்களுடன் இணைந்து பெரிய அளவில் சமூக சேவைகளை மேற்கொள்ளலாம் என திட்டமிட்டதாகவும், ஆனால் தனது அரசியல் ஆசையை தாயிடம் தெரிவித்தபோது, அவர் அதனை கடுமையாக எதிர்த்ததாக கூறினார்.

“அரசியல் என்பது சாக்கடை போன்றது” என்று தனது தாய் கூறியதுடன், அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று பல நாட்கள் தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும் லாரன்ஸ் நினைவுகூர்ந்தார். பின்னர் கொரோனா காலத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்ததும் தாங்கள் மிகவும் வருத்தமடைந்ததாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, “ஒரு நல்ல நண்பர் அரசியலுக்கு வருகிறார்” என்ற நம்பிக்கையுடன் தனது அறக்கட்டளை சார்பில் அதற்கான பணிகளைத் தொடங்கியதாக லாரன்ஸ் கூறினார். விஜய் ஒரு கடின உழைப்பாளி என்றும் அவர் பாராட்டினார்.

மேலும், சமீபத்திய தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் பின்னரே தனது தாய் அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் லாரன்ஸ் தெரிவித்தார். “விஜய் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார்” என்று கூறிய அவரது தாய், இறுதியாக அரசியலுக்கு வர அனுமதி அளித்ததாக அவர் கூறினார்.

இறுதியாக, “எனது ரசிகர்களை என் தாய்க்கு நிகராக மதிக்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? என்பதை நீங்கள் கமெண்ட்களில் சொல்லுங்கள்” என்று ரசிகர்களிடம் நேரடியாக கருத்து கேட்டுள்ளார். இந்த வீடியோ மூலம் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கான தனது விருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரது அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Tags

From Around the web