மிஸ்டர் எக்ஸை தொடர்ந்து நோவா!.. ஆக்‌ஷன் குயினாக மாறிய ரைசா வில்சன்!.. செம சண்டை!..

 
raiza

 ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’.  இந்த படத்தை இயக்குநர் மிலோ இயக்கியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட அவர், இந்த படத்தின் மூலம் இயக்குநராக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற ரைசா வில்சன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

wilson

இந்நிலையில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரைசா வில்சன் பேசியுள்ளார். அதில், “ஒரு கதைக்குள் இன்னொரு கதை என்ற வித்தியாசமான திரைக்கதையுடன் ‘நோவா’ உருவாகியுள்ளது. இதில் நான் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் கலந்த இந்த மாதிரியான கதையில் இதற்கு முன்பு நான் நடித்ததில்லை. அதனாலேயே இந்த படம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது” என்று கூறினார்.

மேலும், கேரள மாநிலத்தின் மறையூர் வனப்பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு குறித்து பேசிய அவர், “சந்தன மரக் காடுகளுக்குள் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இரத்தம் உறிஞ்சும் அட்டைகள், தொடர்ந்து பெய்த மழை, அடர்ந்த பனி, வனவிலங்குகளின் சத்தம் மற்றும் சேறும் சகதியுமான பாதைகள் என பல சவால்களை எதிர்கொண்டோம். ஆரம்பத்தில் இது சாதாரண படப்பிடிப்பாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அங்கு சென்ற பிறகுதான் அதன் சிரமம் புரிந்தது” என்றார்.

இயக்குநர் மிலோவின் பணியாற்றும் விதத்தையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். “முதல் படத்திலேயே இவ்வளவு சிக்கலான கதையை கையாள்வது பெரிய விஷயம். படப்பிடிப்பு தளத்தை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்ததால் சிரமங்கள் பெரிதாக தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

ஆக்‌ஷன் காட்சிகளுக்காக சண்டைப் பயிற்சியாளர் விமல் ராம்போவிடம் சிறப்பு பயிற்சி பெற்றதாகவும், ஏற்கனவே ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக கற்றுக்கொண்ட பயிற்சிகள் ‘நோவா’வில் மிகவும் உதவியதாகவும் ரைசா கூறினார்.

தனது திரைப்பயணம் குறித்து பேசிய அவர், “ஜி.வி. பிரகாஷுடன் நடித்த ‘காதலிக்க யாருமில்லை’ திரைப்படம் 95 சதவீதம் முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் ‘சேஸ்’ படமும் வெளியாகாமல் உள்ளது. இருப்பினும் ‘மிஸ்டர் எக்ஸ்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ‘நோவா’வும் வெளியாக உள்ளதால், தொடர்ந்து படங்கள் வெளியானால் புதிய வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஹாலிவுட் பாணியிலான உருவாக்கம் காரணமாக ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’ திரைப்படம் ரசிகர்களிடையே தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

From Around the web