தலைவி திரிஷாவை பார்க்கவே முடியல!.. த்ரிஷா பேரவையை ஆரம்பித்த ராஜகோபால் பேட்டி!..
நடிகை திரிஷாவின் பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ள விவகாரம் இணையத்தில் கவனம் பெற்று வரும் நிலையில், அதன் நிறுவனர் ராஜகோபால் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால், ‘இளையபுரட்சித் தலைவி திரிஷா பேரவை’ என்ற பெயரில் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதையும், நலத்திட்டங்கள் மற்றும் இலவச சட்ட உதவிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பேரவை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரிஷா குறித்து பேசிய ராஜகோபால், அவருடைய படங்களில் சாமி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்றபோது திரிஷாவை முதன்முறை பார்த்தேன், படத்தில் மிளகாய்ப் பொடி காட்சிக்குப் பிறகு விக்ரம், திரிஷாவைப் பாராட்டும் காட்சியின்போது அவரை நேரில் பார்த்து அன்றிலிருந்தே திரிஷா மீது எனக்கு அபிமானம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன்பிறகு திரிஷா நடித்த பல படங்களைப் பார்த்து, அவரது நடிப்பு, ஆளுமை மற்றும் அமைதியான குணத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
திரிஷாவின் பெயரில் பேரவை தொடங்க அவரிடம் அனுமதி பெற முயற்சி செய்தேன் நேரில் சந்திக்க முடியாததால் இயக்கத்தைத் தொடங்கிவிட்டேன். தொடர்ந்து அவரைச் சந்திக்க முயற்சி செய்து வருகிறேன், திரிஷாவுக்கு இந்தப் பேரவை பிடிக்கவில்லை என்றால் அவரது பெயரை நீக்கிவிட்டு நற்பணிகளைத் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.
பேரவையின் லோகோவில் பச்சை நிறம் இருப்பது அரசியல் அடையாளம் இல்லை, எனது விருப்பப்படி அந்த நிறத்தைத் தேர்ந்தெடுத்தேன். திரிஷா அரசியலில் உயரங்களை அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.
