Rajini 173: ரஜினி, கமல், சுந்தர் சி வேற லெவல் காம்போ.. அப்போ காமெடிக்கு? ஹைப் ஏத்தும் ‘ரஜினி 173’ அப்டேட்
தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற போதிலும் ரஜினி அடுத்தடுத்த வேலையை நோக்கி நகர்ந்து கொண்டுதான் இருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக தற்போது தயாராகி வருகின்றது ஜெயிலர் 2.
நெல்சன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். வேட்டையன், கூலி போன்ற படங்கள் எதிர்பார்த்த வசூலை கொடுக்காத போது ரஜினி அடுத்து பெரிதும் நம்பும் திரைப்படமாக இருக்கிறது ஜெயிலர் 2. இந்தப் படம் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும். அடுத்ததாக ரஜினி யாருடன் கை கோர்க்கிறார் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் இருந்து வந்தது. இதற்கிடையில் ரஜினியும் கமலும் மீண்டும் இணைந்து படம் நடிக்க போகிறார்கள் என்ற செய்தியும் வெளியாகி வந்தது.
ஆனால் அந்தப் படம் இப்போதைக்கு இல்லை. அதனால் ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர் சி தான் இயக்க போகிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினி சுந்தர் சி முதன் முதலாக இணைந்த படம் அருணாச்சலம். பெரிய அளவில் வெற்றிப்பெற்ற படமாகவும் அமைந்தது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் சுந்தர் சி இணைய போகிறார் என்று கூறப்படுகிறது.
ரஜினி சுந்தர் சி இணையும் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்க போவதாகவும் ஒரு ஃபுல் காமெடி கமெர்ஷியல் பேக்கேஜாக அந்தப் படம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. காமெடிக்கு சந்தானம் இருந்தால் இன்னும் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை சுந்தர் சி ரஜினி கமல் இவர்கள் கூட்டணியில் இந்தப் படம் உருவானால் படத்தின் பட்ஜெட்டும் சரி வரவேற்பும் சரி எதிர்பார்க்காத அளவு இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அதே நேரம் சமீபகாலமாக ரஜினியை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே பார்த்த நமக்கு கொஞ்சம் போரடித்துவிட்டது என்றே சொல்லலாம். பழைய ரஜினியை அதாவது குழந்தைத்தனம் மிக்க குறும்புத்தனம் உள்ள ஒரு ஹியூமரான ரஜினியை பார்க்க வேண்டுமென்றால் அது சுந்தர் சியால் மட்டுமே முடியும்.
