×

மறுபடியும் முதல்ல இருந்தா?... ஐயோ பாவம் அஜித், விஜய், ரஜினி.....

 
மறுபடியும் முதல்ல இருந்தா?... ஐயோ பாவம் அஜித், விஜய், ரஜினி.....

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தியேட்டர்களுக்கு 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் என்றாலே முதலில் திரையுலகமே முதலில் பாதிக்கப்படுகிறது. நடிகர், நடிகைகள் கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு வருகிறது. 

தமிழை பொறுத்தவரை ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஜயின் தளபதி 65 என 3 திரைப்படங்கள் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்றுவருகிறது. அண்ணாத்த படப்பிடிப்பு குழுவில் ஏற்கனவே சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு  சென்னை திரும்பினார். அதன்பின் தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருவதால் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், அண்ணாத்த படப்பிடிப்பிற்கு முன்பே துவங்கிய திரைப்படம் அஜித்தின் வலிமை. 2 வருடங்களாகியும் இன்னும் படப்பிடிப்பு முடிந்தபாடில்லை. கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், வெளிநாட்டில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா தொற்று  அதிகரித்து வரும் நிலையில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்குமா என தெரியவில்லை.

அதேபோல், மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் துவங்கியுள்ளது. அங்கும் சில காரணங்களால் படப்பிடிப்பை சரிவர நடத்த முடியவில்லையாம். ஒருவழியாக அங்கு முடித்துவிட்டு சென்னை திரும்பினாலும், சென்னையில் படப்பிடிப்பிற்கு அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. மேலும், கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்கும் நிலையில், தியேட்டர்கள் மீண்டும் மூடப்படலாம். படப்பிடிப்பிற்கும் தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது.

இப்படி 3 பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News