Categories: Cinema News latest news throwback stories

இந்த டைட்டிலை எம்.ஜி.ஆர் எப்படி மிஸ் பண்ணார்?!.. குஷியில் துள்ளி குதித்த ரஜினி…

ஒரு படத்திற்கு யார் ஹீரோவாக நடிக்கிறார் என்பது எப்படி முக்கியமோ அதுபோல படத்தின் தலைப்பு மிகவும் முக்கியம். அதனால்தான் ஒரு படத்தின் டைட்டிலுக்கு இயக்குனர்கள் தலையை பிய்த்து கொள்கிறார்கள். ஏனெனில் ஒரு திரைப்படத்தின் அடையாளமே அப்படத்தின் தலைப்புதான். ஒரு படத்தின் தலைப்பு சரியில்லை எனில் அப்படம் ரசிகர்களை ஈர்க்காது. அதேபோல், ரசிகர்களை முதலில் ஈர்க்கும் விஷயமே தலைப்புதான்.

தமிழ் சினிமாவில் தலைப்பை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பர் மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர். அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், காவல்காரன், வேட்டைக்காரன் என அசத்தலான தலைப்புகளை தன் படங்களுக்கு வைப்பார். அதேபோல், ஏழைகளிடம் தலைப்பு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளி, விவசாயி போன்ற தலைப்புகளை வைப்பார். அவருக்கு அமைந்தது போல் தலைப்புகள் வேறு எந்த நடிகருக்கும் அமையவில்லை.

ஆனால் ரஜினிக்கு சில தலைப்புகள் நன்றாக அமைந்தது. பாயும் புலி, பில்லா, முரட்டுக்காளை, ராஜாதி ராஜா, தர்மத்தின் தலைவன் என பல தலைப்புகளை சொல்லலாம். அதேபோல், எம்.ஜி.ஆர் பட பாணியில் மாவீரன், வேலைக்காரன், பணக்காரன், மன்னன் ஆகிய தலைப்புகளை தனது படங்களுக்கு ரஜினி வைத்தார்.

rajini

ஒருமுறை விஜய வாகினி ஸ்டுடியோ தயாரிப்பில் ரஜினியை வைத்து ஒரு படத்தை எடுத்தனர். அப்படத்திற்கு பி.வாசு இயக்குனர் என முடிவானது. ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு பி.வாசுவுக்கு ஒரு தலைப்பு தோன்றியுள்ளது. உடனே ரஜினிக்கு போன் செய்துள்ளார். ரஜினி போனை எடுத்ததும் ‘சார் ஒரு சூப்பர் டைட்டில் சிக்கியிருக்கு’ என சொல்ல ரஜினி ஆர்வமாக ‘அது என்ன தலைப்பு சொல்லுங்கள்’ என கேட்க பி.வாசு சொன்ன தலைப்புதான் ‘உழைப்பாளி’. இதைக்கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரஜினி ‘எம்.ஜி.ஆர் எப்படி இந்த தலைப்பை விட்டு வைத்தார்?.. பிரமாதம்’ என வாசுவை பாராட்டினாராம்.

இந்த தகவலை வாசுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா