பாரதிராஜா மறைவு செய்தி கேட்டு ஓடிவந்த 16 வயதினிலே ஹீரோக்கள்.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குநரும், கிராமத்து மண்வாசனையை திரைத்துறைக்கு கொண்டு வந்த படைப்பாளருமான பாரதிராஜா மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிராஜாவுடனான தனது நட்பு மற்றும் அவருடைய சாதனைகள் குறித்து உருக்கமாகப் பேசினார். மேலும், ரஜினிகாந்தை தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய ரஜினிகாந்த், “பாரதிராஜாவின் திறமையும் சாதனைகளும் அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். மேலும், அவரை வாழ வைத்த திரையுலகையே அவர் வாழ வைத்தவர். திரைத்துறையில் யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் முதலில் முன்னே வந்து நிற்பார். இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவரது படைப்புகளை யாராலும் மறக்க முடியாது. தமிழ் மக்களின் மனதில் அவர் என்றும் நிலைத்து நிற்பார்” என்றார்.
மேலும், “தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தையைப் போன்றவர். மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். பிடித்தால் பிடித்தது, பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று நேரடியாகச் சொல்வார். என்னைப் பற்றியும் நிறைய விமர்சனங்கள் வைத்திருக்கிறார். ‘ரஜினி, உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது’ என்று கூட வெளிப்படையாகச் சொல்வார். அவருடன் இருந்தால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். அவரைப் போல மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பேசுபவர்கள் அரிது” என நினைவுகூர்ந்தார்.
அத்துடன், “அதனால்தான் மறைந்த எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், மு. கருணாநிதி உள்ளிட்ட அனைவரிடமும் மிகுந்த அன்பும் நட்பும் பெற்றிருந்தார். யாருடைய வீட்டிற்குச் சென்றாலும் குடும்ப உறுப்பினரைப் போல பழகுவார். சமீபத்தில் அவரது மனைவியிடம் பேசும்போது ‘இன்னும் கொஞ்ச நாளில் சரியாகிவிடுவார்’ என்று நம்பிக்கையுடன் கூறிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர் உயிருடன் இருக்கும்போது சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. என்றென்றும் என் நினைவில் அவர் இருப்பார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று கண்கலங்கினார்.
குறிப்பாக 1978ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தில் பரட்டையன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்த விதம் இன்றளவும் பேசப்படுகிறது. அந்தப் படம் அவருக்கு வித்தியாசமான நடிகர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கொடி பறக்குது திரைப்படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தார்.
பாரதிராஜாவை இழந்த துயரத்தில் தமிழ் திரையுலகமே மூழ்கியுள்ள நிலையில், ரஜினிகாந்தின் இந்த உணர்ச்சிபூர்வமான அஞ்சலி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ரஜினிகாந்தை தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் என பாரதிராஜா இயக்கத்தில் நடித்த கமல்ஹாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
