ரூ.800 கோடியை தாண்டிய ஜெயிலர் 2 ... 18 நாளில் புதிய சாதனை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது. படம் வெளியாகி 18 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.807.25 கோடி வசூல் செய்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் வெளியான ஜெயிலர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவான ஜெயிலர் 2 கடந்த அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஓய்வுபெற்ற ஜெயிலரான முத்துவேல் பாண்டியனின் வாழ்க்கையில் மீண்டும் உருவாகும் ஆபத்துகளையும், தனது குடும்பத்தையும் தனது கடந்தகாலத்தையும் பாதுகாக்க அவர் மீண்டும் களமிறங்குவதையும் மையமாகக் கொண்டு ஆக்ஷன் கதையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ஆர்.நிர்மல் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்துடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிர்த்திக் ரோஷன் மற்றும் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட நட்சத்திரங்களின் தோற்றங்களும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன. பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து தனது வழக்கமான டார்க் காமெடி, ஆக்ஷன் மற்றும் ரஜினியின் மாஸ் காட்சிகளை இணைத்து படத்தை உருவாக்கியுள்ளார் நெல்சன்.

ஜெயிலர் 2 வெளியானபோது ரசிகர்களிடமிருந்து பாசிடிவான விமர்சனங்களே அதிகம் வந்தன. குறிப்பக ரஜினியின் ஸ்டைல் மாஸ் காட்சிகள், அனிருத் பின்னணி இசை என பலரும் பாராட்டி கொண்டாடினார்கள். அதேநேரம் இரண்டாம் பாதியில் திரைக்கதை சில இடங்களில் தடுமாறுவதாகவும், பெரிய நட்சத்திர பட்டாளத்தில் சில கதாபாத்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் ரஜினி ரசிகர்களுக்கான முழுமையான கமர்ஷியல் படமாக ஜெயிலர் 2 அமைந்தது என்பது உண்மை.
இந்த நிலையில் விமர்சனங்களைத் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் 2 தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. 18-வது நாளில் கூட இந்தியாவில் ரூ.11.20 கோடி நெட் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 18-வது நாளில் மட்டும் இந்தியாவில் அனைத்து மொழிகளையும் சேர்த்து படம் ரூ.11.20 கோடி நெட் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை ரூ.456.30 கோடி நெட் மற்றும் ரூ.533.75 கோடி கிராஸ் வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் ரூ.273.50 கோடி வசூலித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உலகளாவிய வசூல் ரூ.807.25 கோடியாக உயர்ந்துள்ளது.
75 வயதிலும் பாக்ஸ் ஆபிஸில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிரூபித்து வரும் ரஜினிகாந்துக்கு ஜெயிலர் 2 மற்றொரு மிகப்பெரிய வசூல் சாதனை படமாக மாறியுள்ளது.
