அண்ணாமலைக்கா?.. ராகவா லாரன்ஸுக்கா?.. லதா ரஜினிகாந்துக்கா?.. ரஜினிகாந்தின் திடீர் அறிவிப்பு யாருக்கு?
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை எந்த அரசியல் கட்சியோ, அமைப்போ அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "நமது அன்புத் தலைவர் திரு. ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தக் கூடாது என தலைவரின் உத்தரவுப்படி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் திருச்சி தொகுதியில் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ரஜினிகாந்தின் பெயர் பலமுறை இடம்பெற்றிருந்தது.
அந்த அறிவிப்பில், ரஜினிகாந்த் மீது கொண்டுள்ள மரியாதை மற்றும் அவரால் ஈர்க்கப்பட்டு பொதுச்சேவையில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு பிறகே ரசிகர் மன்றத்தின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால், லாரன்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் ரஜினிகாந்தின் பெயர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதே இந்த திடீர் அறிவிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக கைவிட்ட பிறகு, அவரது பெயர் அரசியல் களத்தில் அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, ரஜினி பெயரை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
விஜய் முதலமைச்சரான பிறகு அண்ணாமலை, ராகவா லாரன்ஸ், லதா ரஜினிகாந்த் என பலரும் அரசியல் மற்றும் மக்களுக்கான சேவை செய்யும் இயக்கங்களை ஆரம்பித்து ரஜினிகாந்தின் பெயரை பயன்படுத்தி வருவதால் இப்படியொரு திடீர் அறிவிப்பு வந்துள்ளதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
