கரகாட்டக்காரன் ரிலீஸாகி 37 வருஷமாகிடுச்சு!.. ராமராஜன் மேக்கப் முதல்!.. வாழைப்பழ காமெடி வரை!..
தமிழ் சினிமா வரலாற்றில் கிராமிய திரைப்படங்களுக்கு தனி அடையாளத்தை உருவாக்கிய படைப்புகளில் ஒன்றாக விளங்கும் "கரகாட்டக்காரன்" திரைப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 38-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1989 ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிக் காவியங்களில் ஒன்றாக திகழ்கிறது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை வழங்கி வசூல் நாயகனாக வலம் வந்த ராமராஜனின் திரைப்பயணத்தில் மகுடம் சூட்டிய படமாக "கரகாட்டக்காரன்" விளங்கியது.
அந்த காலகட்டத்தில் ராமராஜன் நடித்த "ராஜா ராஜாதான்", "தங்கமான ராசா", "அன்புக்கட்டளை", "பாட்டுக்கு நான் அடிமை", "மனசுக்கேத்த மகராசா", "தங்கத்தின் தங்கம்", "என்னெப்பெத்த ராசா", "ஊருவிட்டு ஊருவந்து", "புதுப்பாட்டு" உள்ளிட்ட பல திரைப்படங்கள் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் இத்தனை வெற்றிப்படங்கள் திரையரங்குகளில் ஓடியது இந்திய திரையுலகில் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையிலும் "கரகாட்டக்காரன்" திரைப்படம் திரையரங்கில் 485 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1989 ஜூன் 16 முதல் 1990 அக்டோபர் 11 வரை திரையரங்கில் வெற்றிநடை போட்ட இந்த திரைப்படம், அன்றைய காலகட்டத்தில் வசூல் மற்றும் பார்வையாளர் வரவேற்பில் புதிய வரலாறு படைத்தது.
திரைப்படத்தை இயக்கிய கங்கை அமரன், நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் நாட்டுப்புற கலாச்சாரத்தை இணைத்த இந்த திரைப்படம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தது. அதேபோல், இசைஞானி இளையராஜா வழங்கிய எட்டு பாடல்களும் படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. 37 ஆண்டுகள் கடந்த பிறகும் "கரகாட்டக்காரன்" திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமிய திரைப்படங்களுக்கு ஒரு அடையாளமாக திகழும் "கரகாட்டக்காரன்", தமிழ் சினிமாவின் மறக்க முடியாத மைல்கற்களில் ஒன்றாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், இந்த காவியப்படத்தின் புகழும், ரசிகர்களின் அன்பும் குறையாது என்பதே திரைப்பட ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
