1,000 கோடியை நெருங்கும் ராமாயணா...பாக்ஸ் ஆபீஸில் ருத்ரதாண்டவம்
இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், வெளியான ஐந்தே நாட்களில் உலக அளவில் ரூ.663.90 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டி வருகிறது.
தங்கல் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ளார். இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய பொருட்செலவில் இரண்டு பாகங்களாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ரவி துபே, சன்னி தியோல், அருண் கோவில், லாரா தத்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர்.

கடந்த நவம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ராமாயணா வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் நலல் வரவேற்பை பெற்று வருகிறது. பல்ரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், ராமர் மற்றும் ராவணன் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, போர்க்காட்சிகள், யாஷ் நடிப்பு ஆகியவை பல்ரையும் கவர்ந்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே ரூ. 64 கோடி வசூல் செய்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், தீபாவளி விடுமுறையான திங்கட்கிழமை படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஐந்தாவது நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.107.50 கோடி நிகர வசூலை ஈட்டியது.
Sacnilk வெளியிட்டுள்ள மதிப்பீடுகளின்படி, முதல் ஐந்து நாட்களில் இந்தியாவில் ரூ.413.90 கோடி மொத்த வசூலும், வெளிநாடுகளில் ரூ.250 கோடியும் கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய மொத்த வசூல் ரூ.663.90 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மட்டும் படத்தின் ஐந்து நாள் நிகர வசூல் ரூ.346.35 கோடியாக உள்ளது. குறிப்பாக இந்தி மொழியில் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரசிகர்கள் படத்தைப் பார்த்து வருகின்றனர். தொழில்நுட்ப ரீதியாக இந்திய சினிமாவின் பிரம்மாண்ட முயற்சிகளில் ஒன்றாக ராமாயணா பார்க்கப்படுகிறது.
முதல் ஐந்து நாட்களிலேயே ரூ.663 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் இப்படம் ரூ.1,000 கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
