Thalaivar 173: சிம்புவுக்கு சொன்ன கதை.. இயக்குனரை டிக் அடித்த ரஜினி?... பரபர அப்டேட்..
ரஜினி படத்திலிருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகியதுதான் இப்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு, ரஜினியின் புதிய படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை சுந்தர்.சி இயக்கப்போகிறார் என சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
கடந்த பல வருடங்களாகவே ரஜினி அதிக வன்முறை காட்சிகளை கொண்ட படத்தில் நடித்து வந்ததால் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்தால் கண்டிப்பாக கலகலப்பான காமெடி படமாக இருக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், திடீரென இந்த படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் சுந்தர்.சி.
சுந்தர்.சி ஒரு ஹாரர் காமெடி கதையை ரஜினியிடம் சொன்னார் எனவும், ரஜினி சொன்ன எல்லா மாற்றங்களையும் செய்த பின்னரும் ரஜினிக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதால்தான் சுந்தர்.சி விலகினர் என சொல்லப்பட்டது. இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கமளித்த கமல் ‘என் நட்சத்திரத்திற்கு பிடிக்கும் வரை கதை தேடுவேன். புது இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும்’ என சொல்லிவிட்டார்.

இதையடுத்து அறிமுக இயக்குனர்கள், ஒரு படமெடுத்தவர்கள் என பலரும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சென்று கதை சொன்னதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பார்க்கிங் படத்தை எடுத்து தேசிய விருது பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதால் அவரே உறுதிசெய்யப்படலாம் என்கிறார்கள். ராம்குமாரை தேர்ந்தெடுக்க இன்னொரு முக்கிய காரணம் அவரிடம் முழு கதையும் தயாராக இருக்கிறது. ரஜினியை பொறுத்தவரை 2026 மார்ச் மாதத்திற்குள் ஷூட்டிங் போகவேண்டும்.
அதற்கு ராம்குமார்தான் சரியாக இருப்பார் என ரஜினி நினைக்கிறாராம். எனவே, விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். சிம்புவை வைத்து ஒரு படத்தை ராம்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது டேக் ஆப் ஆகவில்லை. அந்த கதையைத்தான் ரஜினிக்கு ஏற்றவாறு மாற்றி ராம்குமார் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். ஒரு கல்லூரிக்குள் கதை நடப்பது போலவும், பேராசிரியாக உள்ளே போகும் ரஜினி என்ன செய்கிறார் என்பதைத்தான் திரைக்கதையாக எழுதியிருக்கிறாராம் ராம்குமார்.
