Thalaivar 173: கதை மட்டும் பிரச்சனை இல்ல!.. சுந்தர்.சி விலகியதற்கு இதுவும் காரணமா?!...
திரையுலகில் ஒரு இயக்குனர் ஒரு கதையை நடிகரிடம் சொல்லி அவரின் சம்மதத்தை வாங்கி படத்தை இயக்குவதற்கு என்பது சாதாரணமாக நடந்துவிடாது. அதன் பின்னணியில் பல சிரமங்கள் இருக்கிறது. அந்த நடிகருக்கு கதை பிடிக்காமல் போகும். அல்லது கதையில் பல மாற்றங்களை சொல்வார். இயக்குனர் கதையில் மாற்றங்களை செய்த பின்னரும் ஹீரோவுக்கு திருப்தி ஏற்படாது. வேறு கதை இருந்தால் சொல்லுங்கள் என்பார். இதில் கோபப்பட்டு சில இயக்குனர்கள் அந்த கதையில் வேறு நடிகர்களை நடிக்க வைத்த சம்பவமெல்லாம் பலமுறை நடந்திருக்கிறது.
கதை சொல்வதில் இயக்குநர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை அந்த கதை யாரிடமெல்லாம் சொல்ல வேண்டும் என்பதுதான். நடிகரின் அப்பா, அம்மா, நடிகரின் மேனேஜர், நடிகரின் நண்பர்கள் என பலரிடமும் போய் கதை சொல்லுங்கள் என அனுப்பி வைப்பார்கள். அதையெல்லாம் தாண்டித்தான் இயக்குனர் படம் எடுக்க வேண்டும்.
அதுவும் அறிமுக இயக்குனர் மற்றும் ஒரு படத்தை எடுத்த இயக்குனர்கள் என்றால் இன்னும் அலை கழிப்பார்கள். சில இயக்குனர்கள் நடிகரின் வீட்டில் வேலை செய்பவர்களிடம் கதை சொன்ன சம்பவமெல்லாம் கோலிவுட்டில் நடந்திருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ரஜினி நடிக்கும் புதிய படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது பரபரப்பாக பேசப்பட்டது. சுந்தர்.சி சொன்ன ஹாரர் காமெடி கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதுதான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
அது ஒரு காரணமாக இருந்தாலும் அந்த கதையை இந்த படத்தின் ஒரு தயாரிப்பாளராக இருக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யா, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகள் போன்ற பலரிடமும் சொல்ல சொன்னதால் அதிருப்தியாகி இந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகிவிட்டதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.
சுந்தர்.சி ஒன்றும் அறிமுக இயக்குனர் இல்லை. பல படங்களை இயக்கி வெற்றிகளை கொடுத்திருக்கிறார். அவர் ஒரு சீனியர் இயக்குனர். அவரிடம் இப்படி நடந்து கொண்டதும் இந்த படத்திலிருந்து அவர் வெளியேறியதற்கு காரணம் என்கிறார்கள் சிலர்..
