Connect with us

latest news

வாத்தியார் எடுத்த பாடம் எப்படி இருந்துச்சு?.. விடுதலை 2 படத்தின் முழு விமர்சனம் இதோ!..

விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடுதலை 2. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான விடுதலை பாகம் 1 மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தின் 2-வது பாகத்தை எடுத்து வந்தார். அந்த வகையில் இன்று இப்படத்தின் 2-வது பாகம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கின்றது. முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதி மற்றும் அவரின் கடந்த கால வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கின்றார் வெற்றிமாறன்.

படத்தின் கதை கரு:

முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும் மக்களுக்கும் எதிராக நடத்தும் போராட்டத்தை மையமாக வைத்து திரைகதையை கொடுத்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் விடுதலை 2 திரைப்படத்தில் மக்கள் படை உருவான கதை, கம்யூனிசத்தை வாத்தியாரான விஜய் சேதுபதி தேர்ந்தெடுத்ததற்கான காரணம். போலீசுக்கு மக்களுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தில் யார் ஜெயித்தது என்பதை மையமாக வைத்து இயக்கியிருக்கின்றார் .

விஜய் சேதுபதி படம் முழுக்க வாத்தியாராக கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கின்றார். கம்யூனிசத்தை தேர்ந்தெடுக்கும் வாத்தியார் சொல்லும் கருத்துக்கள் அனைத்துமே ஒரு பாடமாக அமைந்திருக்கின்றது. பண்ணையார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய வன்முறைகள், அதற்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் வன்முறையை கையில் எடுத்ததால் நடந்த விபரீதங்கள் என அனைத்தையும் திரைக்கதையாக வடிவமைத்து காட்டி இருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன்.

அது மட்டும் இல்லாமல் உயர் ஜாதி பெண்களை தாழ்த்தப்பட்ட ஆண்கள் காதலிப்பது, அப்படி அவர்கள் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழும் போது ஏற்படும் பிரச்சனைகள், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அலட்சியமாக நடத்தும் கொலைகள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக காட்டி இருக்கின்றார்.

கதாபாத்திரங்கள்: இந்த பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மஞ்சு வாரியர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருக்கின்றார். இவர்களின் மகனாக நடித்த கென் கருணாஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

அசுரன் திரைப்படத்திற்கு பிறகு கென் கருணாசுக்கு மற்றொரு சிறந்த படமாக விடுதலை 2 அமைந்துள்ளது. முதல் பாகத்தில் கெத்து காட்டிய சூரி 2வது பாகத்தில் காணாமல் போய்விட்டார். சேத்தன் நடிப்பு காமெடியாக இருந்தது. விஜய் சேதுபதிக்கு மஞ்சுவாரியிருக்கும் இடையே ஆன காதல் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

படத்தின் பிளஸ்: படத்தின் முதல் 30 நிமிடமும், கடைசி 30 நிமிடமும் ரசிகர்களை வியக்க வைத்திருக்கின்றது. விஜய் சேதுபதியின் நடிப்பு மிரள வைத்துள்ளது. படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரங்களும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பேசிய ஒவ்வொரு வசனங்களும் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முதல் பாதி ஃப்ளாஷ் பேக் காட்சிகளாலும், இரண்டாம் பாதி நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகளாலும் நிரப்பப்பட்டுள்ளது.

படத்தின் மைனஸ்: படத்தின் காட்சிகளும் கதையும் விறுவிறுப்பாக சென்றாலும் அரசியல் பாதையில் இடம் பெற்ற சில வசனங்கள் தோய்வை ஏற்படுத்துகின்றது. தேவையற்ற அரசியல் வசனங்கள் படத்தில் சுவாரசியத்தை குறைப்பதாக இருக்கின்றது. முதல் பாதி ஆவரேஜ் ஆக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதுவே இரண்டாம் பாதி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றது. இளையராஜாவின் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும், பின்னணி இசை இன்னும் தரமாக கொடுத்திருக்கலாம். வெற்றிமாறன் திரைப்படத்தில் எப்போதும் இருக்கும் டப்பிங் பிரச்சினை இந்த திரைப்படத்திலும் சில இடங்களில் இருக்கின்றது. மற்றபடி எப்போதும் போல் வெற்றிமாறன் தனது பாணியில் படத்தை தரமாக எடுத்து இருக்கின்றார்.

Also Read : பெரிய அப்பாடாக்கரா? கோவா கல்யாணத்துக்கு போற.. விஜயை சீண்டிய கூல் சுரேஷ்

author avatar
ramya suresh
Continue Reading

More in latest news

To Top