கருப்பு படத்தில் ஜெயிலர் பாட்டு வச்சேன்!.. பெரிய பில் போட்டாங்க தூக்கிட்டேன் - ஆர்ஜே பாலாஜி!..
நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் கருப்பு திரைப்படம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் இசை உரிமைகள் மற்றும் ஆடியோ நிறுவனங்களின் கட்டணத் தொகை குறித்து அவர் பகிர்ந்த அனுபவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கருப்பு திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவரது மாஸ் தோற்றம் மற்றும் அதிரடி காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
படத்தில் நாயகியாக நடித்துள்ள த்ரிஷா முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளதுடன், பல முன்னணி நடிகர்களும் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை சாய் அபயங்கர் அமைத்துள்ளார். அவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக விநியோக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய வசூலும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக கருப்பு மாறியுள்ளது.
சமிபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “கருப்பு படத்தில் ஜெயிலர் படத்தின் ‘ரத்தமாறே’ பாடலை பயன்படுத்துவதற்காக சுமார் 25 லட்சம் ரூபாய் ஆடியோ உரிமை கேட்டார்கள். தற்போது பல ஆடியோ நிறுவனங்களின் முக்கிய வருமானமே பாடல்களின் உரிமையை விற்பதுதான். கருப்பு படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வாங்கிய சம்பளத்தை விட, ஆடியோ உரிமை நிறுவனம் அதிகமாக கொடுத்திருக்கேன். ஒரு பாடலை வெறும் 5 விநாடிகள் பயன்படுத்தினாலும் அதற்காக தனியாக பணம் செலுத்த வேண்டும். அதனால் தான் அந்த டியூனை அப்படியே பயன்படுத்தாமல், சற்று மாற்றி பாடி பயன்படுத்தினேன்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
இளையராஜாவின் காப்புரிமை பற்றிய ட்ரோல் காட்சிக்கு எதிர்ப்பு குவிந்த நிலையில், படத்தில் இருந்து அதனை ஆர்ஜே பாலாஜி நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்த ரத்தமாறே பாடலுக்கும் ஆர்ஜே பாலாஜிக்கு காப்புரிமை பஞ்சாயத்து வந்ததா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
