
Cinema News
போட்றா வெடிய!.. விரைவில் கேப்டன் பிரபாகரன் 2.. குட் நியூஸ் சொன்ன ஆர்.கே.செல்வமணி!..
Captain Prabakaran: சந்தன கடத்தல் வீரப்பனை வில்லன் கதாபாத்திரமாக வைத்து அதிரடி ஆக்சன் மற்றும் அரசியல் கலந்து ஆர்.கே செல்வமணி இயக்கி 1991ம் வருடம் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது. கடந்த 22 ஆம் தேதி தமிழகத்தில் சுமார் 100 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் வெளியான 4 நாட்களில் 5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணி ‘இப்போது பெரிய நடிகர்களின் படங்களே வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள்தான் ஓடுகிறது. திங்கள் கிழமைகளில் தியேட்டர்களில் கூட்டமில்லாமல் பல காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் கேப்டன் பிரபாகரன் போன வெள்ளிக்கிழமை ரீ-ரிலீஸாகி இந்த திங்கட்கிழமையும் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் தியேட்டர்களுக்கு வந்து பார்க்கிறார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இது கேப்டனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் படக்குழுவுக்கு கிடைத்த வெற்றி. 70 வயது உடைய பலரும் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். கேப்டன் பிரபாகரன் படம் வெளியான போது நான் என் மகனை கூட்டி வந்தேன் இப்போது அவன் அவனுடைய மகனைக் கூட்டி வந்திருக்கிறான். நான், என் மகன், என் பேரன் மூவரும் படத்திற்கு வந்திருக்கிறோம் என பேசுகிறார்கள் இதையெல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கேப்டனின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தோம். காடுகளில், மலைகளில் சூட்டிங் நடக்கும்போது அட்டைப்பூச்சி எல்லோரையும் கடிக்கும். அதை எல்லாம் மீறிதான் இந்த படத்தை எடுத்தோம்.
இந்த படத்தை சுதந்திரமாக எடுத்தேன். இந்த காட்சியை ஏன் எடுக்கிறாய்? அந்த காட்சியை ஏன் எடுக்கிறாய்? என்றெல்லாம் என்னை எதுவும் கேட்கவில்லை. சில நாட்கள் வெறும் குதிரையை வைத்து மட்டுமே காட்சிகளை எடுப்போம். தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்தும் என்னிடம் எதுவும் கேட்டதில்லை’ என பேசினார்.

அப்போது ‘கேப்டன் பிரபாகரன் 2 எடுக்கும் எண்ணம் இருக்கிறதா?’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ‘இப்போது பாடல்கள், காமெடி காட்சிகள் என ஜாலியான படங்களே அதிகமாக இருக்கிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்டன் பிரபாகரன் போன்ற கதையை கொண்ட ஒரு படத்தை எடுத்தால் அது இளம் தலைமுறையிடம் வரவேற்பை பெறுமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது.
ஆனால் ரீ-ரிலீஸில் கேப்டன் பிரபாகரன் படத்தை இளம் தலைமுறைகளும் வந்து பார்ப்பது எனக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஆட்டமா தேரோட்டமா பாடல் வரும் போது இளைஞர்கள் நடனமாடி என்ஜாய் செய்கிறார்கள். ஒரு திருவிழா போல அவர்கள் கொண்டாடுகிறார்கள். எனவே எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.

புஷ்பா படம் வந்ததால் கேப்டன் பிரபாகரன் 2 படம் எடுக்கும் ஐடியாவை தள்ளிப்போட்டேன். ஆனால் படைத்தலைவன் படத்தில் சண்முக பாண்டியனை பார்த்தபோது ‘அட அப்பா மாதிரியே இருக்கிறாரே.. அவரைப் போலவே சண்டைக்காட்சி நடிக்கிறார்..இவரை வைத்து கேப்டன் பிரபாகரன் 2 எடுக்கலாம் என தோன்றியது.
ரீ-ரிலீஸிலும் கேப்டன் பிரபாகரனுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது விரைவில் கேப்டன் 2 படத்தை துவங்க திட்டமிட்டுருக்கிறோம். அதேபோல் புலன் விசாரணை படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என பல வருடங்களாக ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால் அதற்கு அவகாசம் தேவை’ என அவர் பேசியிருக்கிறார்