எம்ஜிஆர் பட டைட்டிலில் களமிறங்கிய சமந்தா!.. ‘எங்கள் தங்கம்’ கத்திஜாவுக்கு கம்பேக் கொடுக்குமா?..
நடிகை சமந்தா நடிப்பில் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் 1970ம் ஆண்டு வந்த படம் தான் எங்கள் தங்கம். அதே டைட்டிலில் சமந்தாவின் படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இந்த ட்ரெய்லரில் , வழக்கமான குடும்பக் கதையாக தொடங்குகிறது. காதலனின் வீட்டிற்குள் நுழையும் சமந்தாவிடம் அங்குள்ள குடும்பத்தினர், "சமைக்கத் தெரியுமா?", "கோலம் போடத் தெரியுமா?", "பாடத் தெரியுமா?" என்று ஒரு மருமகளுக்குத் தேவையான தகுதிகளைப் பற்றி கேள்வி கேட்கின்றனர்.
ஆனால் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அப்பாவியாக நிற்கும் சமந்தா, அடுத்த சில நொடிகளில் முற்றிலும் வேறொரு முகத்தைக் காட்டுகிறார். குடும்பப் பெண்ணாக தோன்றும் அவர், எதிரிகளை வேட்டையாடும் அதிரடி போராளியாக மாறி துப்பாக்கி ஏந்தி வில்லன்களை துவம்சம் செய்யும் காட்சிகள் ட்ரெய்லரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.
குறிப்பாக, "ஒரு நல்ல மருமகளாக இருக்க அழகு, அடக்கம், சமையல், பாட்டு என்று நிறைய தகுதிகள் வேண்டும். ஆனால் எனக்கு அப்படி எந்தத் தகுதியும் இல்லையே" என்று சிரித்தபடி பேசும் சமந்தா, அடுத்த நொடியே "என் குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்" என்று ஆக்ரோஷமாக பேசும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தின் கதையை 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் மூலம் புகழ்பெற்ற ராஜ் மற்றும் டி.கே. கூட்டணி உருவாக்கியுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த், லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிக பார்வைகளை குவித்து வருகிறது. வரும் ஜூன் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'எங்கள் தங்கம்', முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக மாறும் என்ற நம்பிக்கையும் திரைப்பட வட்டாரங்களில் நிலவி வருகிறது.
