சண்டியர் பெயரில் இதுவரை எத்தனை படங்கள் வந்துள்ளன தெரியுமா?
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களின் தலைப்புகளுக்கென்றே தனி வரலாறு உண்டு. அந்த வகையில் சண்டியர் என்ற தலைப்பு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் சு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு சண்டியர் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
ஆனால் சண்டியர் என்ற தலைப்பு தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே இந்தப் பெயரில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, கமல்ஹாசனின் புகழ்பெற்ற விருமாண்டி திரைப்படத்திற்கும் முதலில் வைக்கப்பட்ட பெயர் சண்டியர் என்பதுதான்.
1995ல் வெளியான வரார் சண்டியர் !

1995ஆம் ஆண்டு குரோதம் படத்தின் மூலம் பிரபலமான பிரேம் மற்றும் குஷ்பு நடிப்பில் வரார் சண்டியர் என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் என்.கே. விஸ்வநாதன் இயக்கியிருந்தார். கிராமத்துப் பின்னணியில் உருவான இப்படம் வெளியானபோது பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், சுமாரான வரவேற்பைப் பெற்றது.
சண்டியர் பெயரை மாற்றிய கமல்ஹாசன்!

2004ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் விருமாண்டி . இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் சண்டியர் என்ற பெயர்தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் தலைப்பு குறிப்பிட்ட சமூகத்தை அடையாளப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து படத்தின் பெயரை விருமாண்டி என்று மாற்றினார் கமல்ஹாசன்.
அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். வித்தியாசமான திரைக்கதை அமைப்பு, சிறப்பான நடிப்பு மற்றும் அழுத்தமான கதைக்களத்தால் விருமாண்டி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
2014ல் மீண்டும் வந்த சண்டியர் !

இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு சண்டியர் என்ற பெயரில் மற்றொரு திரைப்படம் வெளியானது. அறிமுக இயக்குநர் சோழதேவன் இயக்கிய இந்தப் படம் குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இதனால் சண்டியர் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானதே பலருக்குத் தெரியாமல் போனது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனின் புதிய படத்திற்கு மீண்டும் சண்டியர் என்ற தலைப்பு வைத்துள்ளார். ஒருகாலத்தில் எதிர்ப்புகள் காரணமாகக் கைவிடப்பட்ட தலைப்பு, தற்போது மீண்டும் கமல்ஹாசனின் திரைப்படத்துடன் இணைந்திருப்பது சினிமா ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
