விஜய் பட நடிகையை ஜோடியாக்கிய சந்தானம்!.. அடுத்த ஹாரர் காமெடி டைட்டில் ‘லவ் பைட்’!..
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படமான 'லவ் பைட்' படத்தின் பூஜை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படக்குழுவினர் விளக்கேற்றி சிறப்பு பூஜை நடத்தி படப்பிடிப்பை தொடங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சந்தானத்தின் நடிப்பில் கடைசியாக வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஒடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், சந்தானம் தற்போது சுதாமன் கிருஷ்ணா இயக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.
தொடர்ந்து திகில், நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து வரும் சந்தானம், தற்போது மீண்டும் பிஸியான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் அவரது அடுத்தடுத்த படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார். காதல், நகைச்சுவை மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அபர்ணா தாஸ் ஏற்கனவே கவினின் டாடா, விஜய்யுடன் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போலை திருமணம் செய்த பின்னர் அவர் மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
மேலும், நடிகர்கள் ஆதித்யா கதிர், விடிவி கணேஷ், ஆனந்தராஜ், பியோர்ன் சுராவ், கல்கி ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தானத்தின் வழக்கமான நகைச்சுவை பாணியுடன், இளைஞர்களை கவரும் வகையில் படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியதையடுத்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விரைவில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
