சிம்பு கூப்பிட்டா மறுக்க முடியுமா?!.. மீண்டும் காமெடிக்கு வருவாரா சந்தானம்?!...

Santhanam: விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். இவரின் திறமையை பார்த்த நடிகர் சிம்பு தான் இயக்கிய மன்மதன் படத்தில் சந்தானத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் சந்தானம் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா உள்ளிட்ட இளம் ஹீரோக்களின் படங்களில் கண்டிப்பாக சந்தானம் இருப்பார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து பல படங்களிலும் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஆனால், ஒருகட்டத்தில் இனிமேல் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்படி அவர் நடித்த பல படங்களில் சில படங்கள் வெளியாகவில்லை. வெளியான படங்களில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் போன்ற படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற படங்கள் தோல்வி பெற்றது.
தோல்விப்படங்களை கொடுத்த பின்னரும் சந்தானம் தன்னை மாற்றிகொள்ளவில்லை. இந்நிலையில்தான், 12 வருடங்களுக்கு முன்பு விஷாலுடன் அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த அப்படத்தில் வரும் சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
எனவே, கோலிவுட்டில் காமெடி வறட்சி நிலவுவதால் சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக வரவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பின் இனிமேல் படம் முழுக்க ஹீரோவுடன் வருவது போல நடிக்க சந்தானம் முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பார்க்கிங் பட இயக்குனரின் இயக்கத்தில் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள படத்தில் சந்தானத்தை நடிக்க படக்குழு ஆசைப்படுகிறது. தன்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் என்பதால் சிம்பு கேட்டால் சந்தானம் மறுக்கமாட்டார் என்றே எல்லோரும் கருதுகிறார்கள். எனவே, பழைய சந்தானத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு அமையும் என்றே எதிர்பார்க்கலாம்.