இந்த வயசில் உனக்கு ஐஸ்வர்யாராயா? கேலி செய்த சீமானுக்கு சரத்குமார் கொடுத்த பதிலடி!
நடிகர் சரத்குமார் கட்டுமஸ்தான உடல் அமைப்பைக் கொண்டவர். தினமும் உடற்பயிற்சி செய்து தன் உடலை முறுக்கேற்றி வைத்துள்ள நடிகர் அவர் தான். அவர் ஆணழகன் பட்டமும் பெற்றவர். ஆரம்பத்தில் புலன்விசாரணை படத்தில் வில்லனாகவும், கேப்டன் பிரபாகரனில் வனத்துறை அதிகாரியாகவும் வந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் சரத்குமார். அவரைப் பற்றி சில சுவாரசியமான தகவல்களைப் பற்றி பிரபல நடிகர், இயக்குனர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். என்ன சொல்கிறார்னு பாருங்க.
100 கிராம் மட்டும் சோறு எடுத்துக்கொள்வாராம் சரத்குமார். உலகில் வாயைக் கட்டுவதுதான் ரொம்ப பிரச்சனை. திருமண விருந்துக்கே போனாலும் என்ன சுவையாக இருந்தாலும் சாப்பிட மாட்டார். அந்தக் கட்டுப்பாடு இருக்கிற ஒரு நடிகன் தமிழ்சினிமாவில் என் அண்ணன் சரத்குமார். இன்னைக்கும் நான் உடற்பயிற்சி கூடத்துல போய் பயிற்சி எடுக்கிறேன்னா அதுக்கு காரணம் அவர்தான்.
உடலை முறுக்கிக்கிட்டு இருந்தான்னா நடிக்க வராது. அர்னால்டுக்கு நடிக்க வராது. ரோபா மாதிரி தான் இருப்பாரு. ஆனால் அந்த உடல் உறுதியில் இருக்கிற ஆணழகன் பட்டம் வென்ற ஒருவன் மிக நுட்பமான, நுணுக்கமான அசைவுகளை, உணர்வுகளை வெளிப்படுத்திய நடிகன் அண்ணன் சரத்குமார். ஆகச்சிறந்த கலைஞன். ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஈரோடு சவுந்தரன் சேரன் பாண்டியன் படத்துக்கு எழுதுகிறான். என் உயிர் அண்ணன். அந்தப் படத்தில் இருந்து சரத்குமாரின் திரையுலகப் பயணமே மாறியது. மிகச்சிறந்த வெற்றிப்படம். அதுக்குப் பிறகு கொண்டாடுகிற நாட்டாமை. இரட்டை வேடத்தில் நடித்த அத்தனைப் படங்களும் மாபெரும் வெற்றி. ரெண்டு வேடம்னா திணறிருவான்.
அதுல நாட்டாமைல அண்ணன், தம்பியாக நடித்த விதம், ரெண்டு வேடத்தையும் வேறுபடுத்திய விதம். மாபெரும் வெற்றி அடைந்தது. எல்லா மொழிகளிலும் வெளியானது. ஆனால் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெற்றி அடைந்தது. எல்லா மொழிப்படத்தையும் பார்த்தேன். ஆனால் அண்ணன் சரத்குமார் அளவுக்கு எவரும் நடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் உள்ள இணைப்பு எது? உடல் நலமில்லாத அறிவு, உடல் நலனில்லாத கல்வி, உடல் நலனில்லாத செல்வம், உடல் நலனில்லாத புகழ் எல்லாம் பயனற்றவை. அப்படி இளம் வயதிலேயே ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் தண்ணி அடிப்பான். சிகரெட் பிடிப்பான். தான்தோன்றித்தனமாக சுற்றுவான்.
இதில் எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாது உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று திருமூலர் சொல்வார். அதுபோல ஒரு நல்ல அறிவாளி, நல்ல பகுத்தறிவுவாதி உடல் என்பது பல நுட்பமான வேலைகளைச் செய்கிற தொழிற்சாலை. அதை அறிவார்ந்தவன். நல்ல பகுத்தறிவுவாதி பேணிக்காப்பான் என்கிறார். அதற்கேற்ப தன் உடலை இந்த 72 வயதிலும் பேணிக்காத்து வருகிறார் சரத்குமார். உலகிலேயே ரஷ்ய அதிபர் புதின் மட்டும்தான் இன்றைக்கும் கராத்தே, குதிரைப்பயிற்சி, நீச்சல் என்று உடற்பயிற்சி செய்து அதே இளமையோடு இருக்கிறார்.
அதுக்கு அப்புறம் இந்தியத்திருநாட்டில் அண்ணன் சரத்குமார் மட்டும்தான் இருக்கிறார். நானும் அண்ணனும் விண்ணூர்தியில் போகும்போது கேலியாகப் பேசிக்கொள்வோம். அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து இருந்தார். இந்த வயசில உனக்கு ஐஸ்வர்யாராய் ஜோடியான்னு கேட்டேன். பொறாமை உனக்கு பொறாமை என்றார் சிரித்துக்கொண்டே. அவர் என்னிடத்தில் சொல்வது ஒன்றுதான். உடலை மட்டும் நன்றாகப் பேணிக்காத்து பராமரித்து வந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும். இன்று அவரது வயதிலே இந்தியாவில் எல்லா மொழிகளிலும் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கிற ஒரே நடிகர் சரத்குமார் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
