அடுத்தவங்க நம்மள புரிஞ்சிக்கணும்னு நினைக்காதீங்க!.. செல்வராகவனின் இன்றைய தத்துவம்!..
இயக்குநர் மற்றும் நடிகருமான செல்வராகவன், சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள புதிய வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் சுய புரிதல் குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.
இயக்குநராக பல வெற்றி படங்களை கொடுத்த செல்வராகவன், கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த மனிதன் தெய்வமாகலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இதற்கிடையில், அவர் இயக்கத்தில் உருவாகி வரும் மெண்டல் மனதில் திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அந்த வீடியோவில் பேசிய செல்வராகவன், “எல்லோருடைய வாழ்க்கையிலும் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், ‘அவர்கள் ஏன் என்னைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்?’ என்ற ஒரே ஒரு கேள்விதான். ஆனால் நாம் முதலில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு மனிதர்கள் கூட ஒரே மாதிரி சிந்திக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி எண்ணங்களும் பார்வைகளும் இருக்கும்.
அப்படியிருக்கும்போது, ஏன் மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்? அனைவரும் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறோம், அதைச் செய்கிறோம் என்று ஓடிக்கொண்டே இருந்தால், இறுதியில் ஏமாற்றம்தான் கிடைக்கும். யாரும் யாரையும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
முதலில் அந்த எதிர்பார்ப்பை விட்டுவிட்டு, உங்களை நீங்களே புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கைக்கு போதுமானது. ‘நான் அவரை முழுமையாக புரிந்துகொண்டேன்’ என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் உங்களை நீங்கள் புரிந்துகொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது தனது திரைப்படப் பணிகளுக்கு இடையே வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் தத்துவ சிந்தனைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் செல்வராகவனின் இந்த புதிய வீடியோவும் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
