Karur: கரூர் சம்பவத்திற்கு நான் காரணமா?!.. பொங்கிய செந்தில் பாலாஜி!…
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. திமுகவினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும் இதற்கு விஜய்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், தவெகவினரோ இது திட்டமிட்ட சதி எனவும் சண்டை போட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் நடந்தவுடனேயே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்தார். பல மணி நேரங்கள் அவர் மருத்துவமனையிலேயே இருந்தார். ஆனால் ‘சம்பவம் நடந்தவுடனே செந்தில் பாலாஜி எப்படி மருத்துவமனைக்கு வந்தார்?’ என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
அதோடு செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரிலேயே சிலர் கூட்டத்தில் புகுந்து கற்களை வீசியும், செருப்பை வீசியும், தள்ளுமுள்ளு ஏற்படுத்தியும், ஆம்புலன்ஸ் வண்டியை உள்ளே கொண்டு வந்தும் நெரிசலை ஏற்படுத்தியதால்தான் இப்படி நடந்தது’ என தவெக நிர்வாகிகள் புகார் சொல்லி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கரூரை சேர்ந்த மக்கள் பலருமே இதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என கூறிவருகிறார்கள்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை செந்தில் பாலாஜி மறுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ விஜய் கூட்டத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. அவர்கள் கேட்ட இடம்தான் கொடுக்கப்பட்டது. விஜய் வர தாமதமானதுதான் அசம்பாவிதம் நடக்க காரணம். கூட்டத்தைக் கணித்து அவர்கள்தான் இடத்தை தேர்வு செய்திருக்க வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு செல்பவர்களும் விஜய் பார்க்க அங்கே கூடி விட்டனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் 5 பேர் உள்ளே புகுந்து அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விட முடியுமா?.
விஷமிகள் கூட்டத்தில் இருந்தால் கண்டிப்பாக அது தெரிந்திருக்கும். விஜய் என்னைப் பற்றி பேச துவங்கியதும்தான் செருப்பு வீசப்பட்டது என்கிற செய்தி தவறானது. செருப்பு வீசப்பட்ட நேரத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. விஜய் பேசிக் கொண்டிருந்தபோது தண்ணீர் கேட்டு மக்கள் கத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் கேட்டும் தண்ணீர் கிடைக்காததால் கவனத்தை ஈர்க்க சிலர் கையில் கிடைத்ததை எடுத்து வீசினார்கள். அந்த இடத்தை நெருங்கும்போது விஜய் வாகனத்தின் முன்னே அமர்ந்திருந்தால் இது நடந்திருக்காது.
கூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனத்தை அந்த இடத்திற்கு சற்று தொலைவிலேயே நிறுத்த சொன்னது காவல்துறை. ஆனால் விஜயோ அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதோடு ஷட்டரையும் மூடிவிட்டார். அதுதான் பிரச்சனை. கூட்டம் உள்ளே வர வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்தார்களா என தெரியவில்லை. கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே வாகனம் வந்ததும் விஜய் உள்ளே சென்றது ஏன்?.. விக்கிரவாண்டி உள்ளிட்ட அனைத்து கூட்டங்களிலும்தான் பிரச்சனை ஏற்பட்டது.
கரூரில் மட்டும் ஏற்பட்டதாக விஜய் செல்வது பொய்.. ‘தினமும் நான் வாகனத்தில் செல்கிறேன். இன்று மட்டும் எப்படி எனக்கு விபத்து நடந்தது?’ என்று கேட்பது போல் இருக்கிறது. விஜயின் ஒவ்வொரு கூட்டத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்துள்ளனர். இது அவருக்கு தெரியாதா?’ என செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
