திடீரென கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம்.. இருக்குற பிரச்சினை போதாதா?
சின்னத்திரை நடிகரான தினேஷ் திடீரென கைது செய்யப்பட்டார். கடந்த பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட போட்டியாளர்தான் தினேஷ். இவர் பிரபல சின்னத்திரை நடிகையான ரட்சிதாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடிதான் ரட்சிதாவும் தினேஷும். இருவரும் இணைந்து பிரிவோம் சந்திப்போம் என்ற சின்னத்திரை தொடரில் நடித்துள்ளனர்.
அதிலிருந்துதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து கல்யாணம் வரை சென்றது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர். இருவருக்கும் பிரச்சினை இருக்கிறது என்பது ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்த போதுதான் தெரியவந்தது. தன் கணவரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் ரட்சிதா எதுவும் சொல்லவில்லை.
அதுதான் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகுதான் ரட்சிதாவுக்கும் தினேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது தெரியவந்தது. அதனை அடுத்து தினேஷும் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டார். வீட்டிற்குள் தினேஷின் தெளிவான பேச்சு, அவருடைய நடவடிக்கை என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்டவரை ஏன் ரட்சிதா வேண்டாம் என சொல்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் இருவருடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில்தான் இன்று போலீஸாரால் தினேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். நெல்லை மாவட்டம் பணகுடியில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பணத்தை ஏமாந்தவர் கொடுத்த வாக்குமூலம் , தினேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். பணகுடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 3 லட்சம் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக தினேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.2022ல் பணத்தை வாங்கிவிட்டு அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார்.
பணம் கேட்டு அந்த பெண் போகும் போதெல்லாம் ஏமாற்றி வந்த தினேஷ் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் தந்தையை கம்பால் அடித்து மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தினேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
