ரக்பி ப்ரீமியர் லீக் நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!.. அடேங்கப்பா என்ன தத்துவ மழையா பொழியிறாரு!..
முன்னணி நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் (Rugby Premier League) இரண்டாவது சீசன் நிகழ்வில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விளையாட்டு மற்றும் கலை உலகம் இணைந்த இந்த பிரம்மாண்ட விழாவில் அவர் தேசிய கீதம், ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான "சஞ்சாரி" பாடலை பாடி அரங்கத்தை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களின் கரகோஷத்திற்கிடையே மேடையேறிய ஸ்ருதிஹாசன், மைதானத்தில் நிலவிய உற்சாகமான சூழலை வெகுவாக பாராட்டினார். இந்த தொடரில் பங்கேற்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், ரசிகர்களின் ஆற்றலும் ஈடுபாடும் தன்னை கவர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசிய அவர், எந்த விளையாட்டாக இருந்தாலும் வெற்றியின் பின்னால் கடின உழைப்பும் பல சோதனைகளும் இருக்கும் என்றார். ஒருவர் தனது கனவை உண்மையாக நேசித்து அதற்காக முழுமையாக அர்ப்பணித்தால், கடினமான தருணங்கள்கூட வாழ்க்கையின் முக்கியமான பாடங்களாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஆண்டு ரக்பி பிரீமியர் லீக்கில் பெண்கள் அணிகளும் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக ஸ்ருதிஹாசன் கூறினார். இந்தியாவில் திறமைகள் ஏராளமாக இருந்தாலும், அவர்களுக்கு தேவையான நிதி உதவி, அங்கீகாரம், தரமான பயிற்சி மற்றும் ஊக்கமளிக்கும் சூழல் கிடைப்பது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
திறமையான வீரர்களுக்கு தங்களது கனவுகளை நனவாக்கும் மேடையை உருவாக்கி தரும் ரக்பி பிரீமியர் லீக்கின் முயற்சி பாராட்டுக்குரியது என்றும், விளையாட்டு வளர்ச்சிக்காக இத்தகைய தொடர்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடிகை, பாடகி என்ற அடையாளங்களை தாண்டி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஸ்ருதிஹாசன் பகிர்ந்த கருத்துக்கள், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
