சூர்யாவை போல சிம்புவும் பிளாக்பஸ்டர் கொடுக்க தீயா வேலை செய்யுறாரு!.. அரசன் சிம்மாசனம் ஏறுவான்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன், தற்போது தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழு கவனத்துடன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இரவு நேர புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள சிம்பு, அதனுடன் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அரசன் திரைப்படம், 2018-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற வட சென்னை திரைப்படத்தின் அதே சினிமா உலகில் அமைந்துள்ளதுதான் இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சமூத்திரக்கனி, அண்ட்ரியா மற்றும் கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிரூத் ரவிசந்திரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் கலைப்புளி எஸ்.தானு தயாரித்துள்ள இந்த திரைப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘வட சென்னை’ திரைப்படத்தின் உலகத்தை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள ‘அரசன்’, தமிழ் சினிமாவின் முக்கிய கேங்ஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இரவு நேரப் படப்பிடிப்பு நடத்தி வருவதால், எனது உயிரியல் கடிகாரத் தாளம் முற்றிலும் குழம்பிவிட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நள்ளிரவு நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் சிம்பு தனது கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருவது தெளிவாக தெரிகிறது.
சிம்புவின் இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு கடினமாக உழைக்கும் நடிகர்", "அரசனுக்காக காத்திருக்கிறோம்" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
