Categories: Cinema News latest news throwback stories

இளையராஜா தவறவிட்ட சசிரேகா.. சரியாக பயன்படுத்திய டி.ராஜேந்தர்.. மறக்கமுடியாத பாடல்கள்!..

திரையுலகில் சில பாடகிகள் வருவார்கள். சில பாடல்களை பாட மட்டுமே அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதன்பின் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், சில பாடகிகளுக்கு தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைக்கும். எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர் அப்படி இளையராஜா இசையில் பல நூறு பாடல்களை பாடி ரசிகர்களுக்கு இசை விருந்து வைத்தனர். இப்போதும், 70.80 கிட்ஸ்களுக்கு பிடித்த பல பாடல்களை இவர்கள்தான் பாடியிருப்பார்கள்.

ஆனால், சில பாடகிகள் குறைவான பாடல்களை பாடியிருந்தாலும் காலத்திற்கும் மறக்கமுடியாத பாடல்களை பாடியிருப்பார்கள். அதில் ஒருவர்தான் பாடகி பி.எஸ்.சசிரேகா. 70,80 களில் பல ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். ஆனால், இவரின் பெயரை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

இளையராஜா இசையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ பாடலை சசிரேகாதான் பாடினார். மேலும், கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் இடம்பெற்ற ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ பாடலை பாடியதும் இவரே. இது தவிர சில பாடல்களையும் இளையராஜா இசையில் சசிரேகா பாடியுள்ளார்.

இவரை அதிகம் பயன்படுத்தியது டி.ராஜேந்தர் மற்றும் மனோஜ்கியான் ஆகிய இரு இசையமைப்பாளர்கள் மட்டுமே. உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற ‘இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாலோ’, உறவை காத்த கிளி படத்தில் இடம் பெற்ற ‘எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி’.. ஒரு தாயின் சபதம் படத்தில் இடம் பெற்ற ‘சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது’ என அவரின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை சசிரேகா பாடியுள்ளார்.

அதேபோல், மனோஜ் கியான் இசையில் ஊமை விழிகள் படத்தில் இடம் பெற்ற ‘மாமரத்து பூவெடுத்து, ராத்திரி நேரத்து பூஜையில்’ , உழவன் மகன் படத்தில் ‘செம்மறி ஆடே செம்மறி ஆடே மற்றும் ‘உன்னை தினம் தேடும் தலைவன்’ ஆகிய இரண்டு பாடல்களிலும் சசிரேகா பாடியிருப்பார். குறிப்பாக செந்தூரப்பூவே படத்தில் இடம்பெற்ற ‘செந்துரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா’ பாடல் அப்போது ரசிகர்களை மிகவும் கவர்ந்த பாடலாகும்.

அதன்பின்னரும் நாயகன் உள்ளிட்ட பல படங்களில் சசிரேகா பாடினார். பல ஹிட் பாடல்களை பாடிய இவர் தற்போது யுடியூப்பில் பக்தி பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா