60 ஆண்டுகளை கடந்தும் மவுசு குறையாத திருவிளையாடல்!.. 80 திரையரங்குகளில் வெளியீடு !
தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத பல படங்களைக் கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பாசமலர், பாவ மன்னிப்பு, முதல் மரியாதை, புதிய பறவை உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம். அந்த வகையில் அவரது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது திருவிளையாடல் .
1965ஆம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ், டி.எஸ்.பாலையா, கே.பி.சுந்தராம்பாள், முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.
சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவபெருமானாக சிவாஜி கணேசனும், பார்வதியாக சாவித்திரியும் தங்களது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருந்தனர். குறிப்பாக, தருமியாக நடித்த நாகேஷுக்கும் சிவாஜிக்கும் இடையேயான உரையாடல் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், நக்கீரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையேயான வாக்குவாதமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே , ஒரு நாள் போதுமா , பழம் நீயப்பா , இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.

புராணக் கதையை நகைச்சுவை, இசை, பக்தி, இலக்கியம் என அனைத்தும் கலந்த ஒரு திரைப்படமாக ஏ.பி.நாகராஜன் உருவாக்கியிருந்ததுதான் திருவிளையாடலின் தனிச்சிறப்பு. 80 90களில் பல ஊர்களில் கோவில் திருவிழாக்களில் இப்படம் அடிக்கடி திரையிடுவார்கள். பல ஆண்டுகளாக அடிக்கடி ரீ ரிலீஸ் ஆகும் படங்களில் திருவிளையாடல் படமும் ஒன்று. அந்த அளவிற்கு இந்த படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், வெளியாகி 61 ஆண்டுகளைக் கடந்த திருவிளையாடல் திரைப்படம் நாளை (நவம்பர் 27) மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 80 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய திரைப்படங்களே திரையரங்குகளில் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாத சூழலில், 60 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிவாஜியின் திரைப்படம் இத்தனை திரையரங்குகளில் மீண்டும் வெளியாவது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் சிவாஜி கணேசனின் அசாத்திய நடிப்புத் திறமையைத் திரையரங்கில் பார்த்து ரசிக்க இந்த ரீ ரிலீஸ் ஒரு வாய்ப்பாக அமையும்.
