‘இட்லி உப்புமா’ நியாபகம் இருக்கா? அப்படி இப்ப வரைக்கும் மறக்க முடியாத சில படங்களின் காட்சிகள்

by Rohini |
sooryavamsam
X

sooryavamsam

சில படங்களின் காட்சிகள் நம்மை பெரிதளவில் பாதித்திருக்கும் அல்லது அதிக அளவில் ரசிக்க வைத்திருக்கும். ஒரு சில படங்களின் பெயரை சொன்னாலே ஒரு குறிப்பிட்ட காட்சிதான் நம் கண்முன் நிற்கும். அப்படி தமிழ் சினிமாவில் இப்ப வரைக்கும் மறக்க முடியாத சில காட்சிகளின் படங்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

சூர்யவம்சம்: இந்தப் படத்தில் இருந்துதான் இட்லி உப்புமா என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியவந்தது. அது வரை இட்லி உப்புமாவை பற்றி யாருக்கும் தெரியாது. தன்னை தேடி வரும் அப்பாவுக்கு சாப்பிட வீட்டில் ஒன்றுமில்லை என்று தெரிந்த தேவையாணி வீட்டில் இருந்த பழைய இட்லியை உதிர்த்து உப்புமாவாக செய்து கொடுப்பார். அது இப்ப வரைக்கும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் காட்சியாகத்தான் பார்க்கப்படுகிறது.

சூர்யவம்சம் படத்தில் இந்த சீன் மட்டும் இல்லாமல் தேவயாணி கலெக்டர் ஆனதும் அவர் அலுவலகத்திற்கு மாமனார் சரத்குமார் வர அவர் காலில் தொட்டு வணங்குவது, தாத்தாவுக்காக பேரன் பாயாசம் கொடுப்பது, மகன் சரத்குமார் பெரிய பஸ் ஓனர் ஆனதும் அந்த விழாவிற்கு வீட்டில் இருப்பவர்கள் அவர்களுக்கே தெரியாமல் ஒவ்வொருவராக கலந்து கொள்வது என பெரும்பாலான சீன்களை இப்ப வரைக்கும் மறக்க முடியாது.

காதலுக்கு மரியாதை: காதலின் ஆழத்தை 90களில் எடுத்துக்காட்டிய படங்களில் காதலுக்கு மரியாதை திரைப்படமும் ஒன்று. இந்தப் படத்தில் விஜய் - ஷாலினியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்துப் போக நிஜத்திலேயே ஷாலினியை விஜய் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணினார்கள். இந்தப் படத்தில் முதல் சீனை யாராலும் மறக்க முடியாது. நூலகத்தில் விஜயும் ஷாலினியும் சந்தித்துக் கொள்ளும் அந்த தருணம் யாராலும் மறக்க முடியுமா?

அதே போல் கிளைமாக்ஸில் ஷாலினியை எப்படியை விட்டு போவது என ஸ்ரீவித்யா ஷாலினியின் வீட்டில் உள்ளவர்களிடம் என்கிட்டயே கொடுத்துடுங்க என்று கேட்பதும் ஷாலினியின் அம்மாவும் எடுத்துக்கோங்க என்று சொல்வதும் அமோக வரவேற்பை பெற்ற காட்சியாக அது அமைந்தது.

துள்ளாத மனமும் துள்ளும்: விஜய் சிம்ரன் நடிப்பில் வெளியான ஒரு அழகான காதல் காவியம்தான் இந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம். ஆரம்பத்தில் ஒரு ரவுடியாகவே விஜயை பார்த்து வந்த சிம்ரன் தனக்கு உதவி செய்தது விஜய்தான் என்று தெரியாமல் போலீஸை வைத்தே விஜயை அடிக்க சொல்வார். கடைசியில் இன்னிசை பாடி வரும் பாடலை பாடி ஒட்டுமொத்த திரையரங்கையும் அழ வைத்து விட்டார் விஜய். அந்த சீனையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?

இணைந்த கைகள்: 1990 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அருண் பாண்டியன் மற்றும் ராம்கி நடித்திருப்பார்கள். என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆபாவணன். இந்தப் படத்திற்கு மனோஜ்கியான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் ராம்கி கயிறை பிடித்து தொங்க ஒரு கட்டத்தில் கயிறு அறுந்து கீழே விழப் போகும். அந்த நேரத்தில் அருண் பாண்டியன் மறுமுனையில் உள்ள கயிறை பிடிக்க இருவரும் நடுவில் சந்தித்து கொண்டு கைகளை பிடிப்பது போல அந்த காட்சியில் இடம்பெற்றிருக்கும். இந்த சீனையும் யாராலும் மறக்க முடியாது.


சேதுபதி ஐபிஎஸ்: 30 ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சேதுபதி ஐபிஎஸ்.இந்தப் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். ஏவிஎம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் பின்னணி இசையில் இருந்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இதில் ஒரு ஸ்டண்ட் காட்சி இருக்கும். விஜயகாந்தின் அறிமுகக் காட்சியில் பிரம்மாண்ட கடிகாரம் ஒன்றில் ஏறி வெடிகுண்டை செயலிழக்க செய்யும் அந்த காட்சி மிகுந்த பாராட்டுக்களை பெற்றது. இந்த காட்சியில் விஜயகாந்த் எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் நடித்திருக்கிறார்.


இதையும் படிங்க: மணிவண்ணனுக்காக தான் இசை அமைக்காவிட்டாலும் இளையராஜா கொடுத்த ஒரு பாடல்... படம் சூப்பர்ஹிட்!

Next Story