Categories: Cinema News latest news

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க பாஸ்… சூரியை போட்டு பாடாய் படுத்திய வெற்றிமாறன்… அடப்பாவமே!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சூரி முதன்முதலில் கதாநாயகனாக ஒரு சீரீயஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார் என்ற விஷயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Viduthalai

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் சூரி, “விடுதலை” திரைப்படம் தொடங்கியது குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

காரைக்குடி கதை

“வடச்சென்னை” திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பல முறை வெற்றிமாறனை சந்தித்துள்ளாராம் சூரி. அப்போதெல்லாம் வெற்றிமாறனின் திரைப்படங்களை புகழ்ந்து பேசுவாராம் சூரி. மேலும் சூரி, வெற்றிமாறனிடம், “உங்கள் திரைப்படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும்” என்று கேட்பாராம்.

இதனை தொடர்ந்து ஒரு நாள் சூரியை அழைத்திருக்கிறார் வெற்றிமாறன். அப்போது காரைக்குடியை பின்னணியாக வைத்து ஒரு கதையை சூரிக்கு கூறினாராம். பொறுமையாக அந்த கதையை கேட்டுக்கொண்டிருந்த சூரியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, “நீங்கள்தான் ஹீரோ” என கூறினாராம் வெற்றிமாறன். இதனை கேட்டதும் சூரிக்கு ஷாக் தாங்கமுடியவில்லையாம்.

Viduthalai

ஆனால் சூரிக்கு கதாநாயகனாக நடிப்பதில் தயக்கம் இருந்ததாம். அந்த தயக்கத்தை மெல்ல மெல்ல போக்கியிருக்கிறார் வெற்றிமாறன். சூரியும் அந்த திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து எந்த ஒரு தகவலையும் கூறவில்லையாம்.

துபாய் கதை

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து வெற்றிமாறன் மீண்டும் சூரியை அழைத்தாராம். இந்த இடைப்பட்ட காலத்தில் “வடச்சென்னை” திரைப்படம் வெளிவந்துவிட்டதாம். வெற்றிமாறன் அழைத்ததை தொடர்ந்து சூரி அவரை சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்போது வெற்றிமாறன், “இந்த படம் இப்போதைக்கு எடுக்க முடியாத சூழல் வந்துருச்சு” என கூறியுள்ளார். சூரிக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாம்.

ஆனால் சூரி ஆச்சரியப்படும் விதமாக, “இந்த கதையை விடுங்கள். வேறொரு கதை இருக்கிறது. அதை படமாக்கலாம்” என்று துபாயை பின்னணியாக வைத்து ஒரு கதையை கூறினாராம் வெற்றிமாறன். இதனை தொடர்ந்து “அசுரன்” திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க நேர்ந்தது. ஆதலால் சூரியிடம், “அசுரன் முடித்துவிட்டு நம்ம படத்தை தொடங்கிவிடலாம்” என்று கூறியிருக்கிறார்.

வைத்து செய்த கொரோனா

“அசுரன்” படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு பிறகு வெற்றிமாறன் டாப் ஹீரோக்களுடன் இணையவுள்ளதாக பல செய்திகள் வெளிவந்தனவாம். இந்த செய்திகளை எல்லாம் கேள்விப்பட்ட சூரி, மிகவும் படபடப்போடு இருந்தாராம். எனினும் அடுத்த ஒரு மாதத்தில் வெற்றிமாறன், சூரியை அழைத்து “விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிடுவோம். ஆனால் அதற்கு முன் துபாயில் ஒரு ஃபோட்டோஷூட் எடுக்கவேண்டும்” என கூறியிருக்கிறார். அதன் பின் சூரி, வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் சிலரும் ஃபோட்டோஷூட்டுக்காக துபாய் சென்றிருக்கின்றனர்.

Viduthalai

ஆனால் அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததால் படக்குழுவினர் பாதியிலேயே இந்தியா திரும்பிவிட்டனராம். அதன் பின் கொரோனா பரவல் குறைந்த பிறகு சூரியை அழைத்த வெற்றிமாறன், “கொரோனா நார்மலுக்கு வந்திடுச்சு. ஆனாலும் இந்த கதையை நம்மால பண்ணமுடியாது” என கூறியிருக்கிறார்.

சூரி மீண்டும் சோகமாகிவிட்டாராம். ஆனால் சூரி மீண்டும் அதிர்ச்சியடையும் விதத்தில் “வேறொரு போலீஸ் கதை இருக்கிறது. அது பண்ணலாம்” என கூறியிருக்கிறார். அவ்வாறு ஆரம்பித்த படம்தான் “விடுதலை”. இவ்வாறு பல காலம், பல தடைகளை கடந்து “விடுதலை” திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இதையும் படிங்க: ராஜமௌலி படம் ஆஸ்கர் போனதுக்கும் அவர் குடும்பத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?… ஒரே திகிலா இருக்கேப்பா…

Arun Prasad
Published by
Arun Prasad