ஓடிடியில் களமிறங்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்!..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான், தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இது8 மட்டுமின்றி கோவா, வித் லவ் உள்ளிட சில படங்களையும் தயாரித்துள்ளார். இதில் வித் லவ் மட்டுமே அவருக்கு வெற்றியை கொடுத்தது.
இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் புதிய ஓடிடி படைப்பு ஒன்று உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூச முனிசாமி வீரப்பன் , லேபிள் ஆகிய வெப் தொடர்களின் எழுத்துப் பணிகளில் பங்களித்த ஜெயச்சந்திரன் ஹாஷ்மி, இந்தப் புதிய படைப்பை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படமாகவோ அல்லது வெப் தொடராகவோ உருவாகலாம் என கூறப்படுகிறது.
சௌந்தர்யாவின் இந்த புதிய படைப்புக்காக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது. திரையரங்க வெளியீடுகளைத் தாண்டி ஓடிடி தளங்களுக்கான படைப்புகளிலும் சவுந்தர்யா ரஜினிகாந்த் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படைப்பில் நடிக்கவுள்ள நடிகர்கள், கதைக்களம், படப்பிடிப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
