Ramayana Movie: பிரமாண்டத்தில் மிரட்டும் ராமாயணா!.. ராஜமௌலியே இப்படி சொல்லிட்டாரே!
இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ராமாயணா திரைப்படம் இன்று (நவம்பர் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தங்கல் , சிச்சோரே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராமாயணா '. இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக கேஜிஎஃப் புகழ் யாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் லட்சுமணனாக ரவி துபே, அனுமனாக சன்னி தியோல், கைகேயியாக லாரா தத்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளனர். இப்படத்திற்கு கிட்டதட்ட ரூ 2000 கோடி வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ராமாயணா திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே அப்படத்தின் பிரமாண்டம் மற்ர்றும் காட்சி அமைப்புகளே. அயோத்தி அரண்மனை, இலங்கை ராஜ்ஜியம், வனவாசக் காட்சிகள் எனப் பல்வேறு பகுதிகள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ராவணனின் தோற்றம், அவரது பத்து தலைகளைக் காட்சிப்படுத்திய விதம், ஜடாயு தொடர்பான காட்சிகள் ஆகியவை படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக பலரும் பாராட்டுகிறது.
மிகுந்த எதிரிபார்ப்புக்ளுக்கிடையே ராமாயணா இன்று உலகெமெங்கும் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே பாசிடிவான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக யாஷின் ராவணன் கதாபாத்திரம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ராமராக நடித்துள்ள ரன்பீர் கபூர் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும், சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி தனது இயல்பான நடிப்பால் அந்த வேடத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் என்றும் விமர்சனங்கள் வருகின்றன. அதேநேரத்தில் படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்வதாகவும் சில விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நான் ஈ, பாகுபலி , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்டமான திரைப்படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி, ராமாயணா திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அதில் ராமாயணா படத்தின் பிரமாண்டமும், திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விஷுவல்களும் வியக்க வைக்கின்றன. வனவாசம் தொடங்கிய பிறகு ராமராக ரன்பீர் கபூர் அமைதியான அதே நேரத்தில் கம்பீரமான நடிப்பையும், ராவணனாக யாஷ் மிரட்டலான தோற்றத்தையும், சீதையாக சாய் பல்லவி அழகான நடிப்பையும் வழங்கியுள்ளனர்.
ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. இவ்வளவு பிரமாண்டமான படைப்பை அழகாகத் திரைக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பாராட்டியுள்ளார்.
இந்திய சினிமாவில் பிரமாண்டமான திரைப்படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ராஜமௌலியே ராமாயணா படத்தைப் பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
