Moon walk: பிரபு தேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!.. வெளியான மூன் வாக் புரமோ வீடியோ!...
சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இசைப்புயலாக வந்தாரோ அப்படி நடனப்புயலாக வந்தவர்தான் பிரபு தேவா. இருவருமே ஒரே காலத்தில் ரசிகர்களிடம் பிரபலமாகி சினிமாவில் வளர்ந்தவர்கள். இருவரும் இணைந்தால் அந்த படமும், பாடல்களும் அதிரி புதிரி ஹிட்டுதான். 90களில் ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடித்த எல்லா திரைப்படங்களிலும் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்தான். இந்த காம்பினேஷன் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்தது.
ஜென்டில்மேன் படத்தில் ரஹ்மான் இசையமைத்த ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பாடலுக்குதான் பிரபுதேவா முதன்முதலில் நடனமாடினார். அந்த பாடல் செம ஹிட். அதன்பின் ரஹ்மான் இசையில் பிரபுதேவா ஹீரோவாக நடித்த காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு போன்ற எல்லா படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட்.
இந்நிலையில்தான் 25 வருடங்களுக்கு பின் ரஹ்மானும், பிரபுதேவாவும் மூன் வாக் என்கிற ஒரு புதிய படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை மனோஜ் என்.எஸ் இயக்க யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. ஃபேண்டஸி உலகத்தில் கதை நடப்பது போல திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில்தான், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன் வாக் பாடலில் புரமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது. ரஹ்மான், பிரபுதேவா கூட்டணியில் உருவான் படங்களின் பெயர்கள்களை தாங்கிய ஒரு ரயிலில் இருவரும் ஏறுவது போல இந்த வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள். விரைவில் முழு வீடியோவை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
