×

ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் அசத்தலான படங்கள்

 
act1
சுதந்திரத்தினத்தன்று பிறந்ததாலோ என்னவோ...இவரது படங்களில் தேசிய உணர்வு அர்ஜூனுக்கு பீறிட்டு எழுவதைப் பார்க்க முடிகிறது. 

ஆக்ஷன் கிங் என்றாலே அர்ஜூன் தான். அதிரடி சண்டைக்காட்சிகள் அவரது படங்களில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். இவர் கராத்தே கலையில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். இவரது ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளைப் பார்த்து வியந்த ரசிகர்கள் இவருக்கு ஆக்ஷன் கிங் என்ற பட்டத்தை வழங்கினர். அர்ஜூன் தினமும் உடற்பயிற்சி செய்து உடலை இன்று வரை பிட் ஆக வைத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது நடிப்பில் அசத்தலான சில படங்களைப் பார்க்கலாம். 

ஜென்டில்மேன் 


ஜென்டில்மேன் 1993-ம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்டமான தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். இது அவரின் முதல் படம். தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், நம்பியார், கவுதமி, வினித், பிரபுதேவா, மனோரமா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அந்த ஆண்டு வெளிவந்த இந்தியப் படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 

ஒட்டகத்தக் கட்டிக்கோ..., சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு... கலக்குது பார் இவ ஸ்டைலு...பாடல் இன்று வரை தூள் தான். மேலும், என் வீட்டுத் தோட்டத்தில், பார்க்காதே பார்க்காதே.., உசிலம்பட்டி பெண்குட்டி....முத்துப்பேச்சி பாடல்கள் மனதைத் தொடுபவை. இப்படத்தில் பிரபுதேவா டான்ஸ் ஆடிய சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு பாடல் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல் நடன அசைவுகளுடன் டான்ஸ் ஆட முயற்சித்து கால் சுளுக்கிக் கொண்டவர்கள் ஏராளம். இந்த ஒரு பாடலுக்காக சிறப்புத் தோற்றத்தில் கவுதமி ஆடியிருப்பார். சிறந்த படம், சிறந்த இயக்குனர்  உள்பட 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளைப் பெற்றது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்பட 4 தமிழக அரசின் மாநில விருதையும் பெற்றது. 5 சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும் பெற்றது. இந்தப்படம் இந்தியிலும் ரீமேக் ஆனது. ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வெள்ளி விழா கண்ட படம். இப்படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடி சூப்பர். அதிலும் அவர்கள் விளையாடும் டிக்கிலோனா விளையாட்டைப் பார்க்கும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

ஜெய்ஹிந்த் 


ஜெய் ஹிந்த் 1994ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தை நடித்து இயக்கியவர் அர்ஜுன். இப்படத்தை தயாரித்தவர் எஸ்.ஜெயின்ராஜ் ஜெயின். இப்படத்தில் ரஞ்சிதா, கவுண்டமணி, மனோரமா, செந்தில், மேஜர் சுந்தரராஜன், சாருஹாசன், சந்திரசேகர், கல்யாண்குமார், ராஜேஷ், தேவன் ஆகியோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையில் பாடல்கள் அத்தனையும் ஹிட். தேசப்பற்றை மையமாகக் கொண்ட படம். படத்தில் அர்ஜூன் அற்புதமாக தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார். சுதந்திரத்தினத்தன்று பிறந்ததாலோ என்னவோ...இவரது படங்களில் தேசிய உணர்வு அர்ஜூனுக்கு பீறிட்டு எழுவதைப் பார்க்க முடிகிறது. 

முத்தம் தர ஏத்த இடம்..., கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு..., போதை ஏறிப்போச்சு..., ஜெய்ஹிந்த் போன்ற பாடல் முத்தானவை. இந்தப்படத்தில் இடம்பெறும் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் பாடல் இன்று வரை சுதந்திர தின மற்றும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் இடம்பெறுகிறது. 

கர்ணா

1995ல் வெளியான இப்படத்தில் அர்ஜூன் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களை ஏற்று நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தில் அர்ஜூன், ரஞ்சிதா, வினிதா, கவுண்டமனி,  செந்தில், ரவிச்சந்திரன், சுஜாதா, மோகன்ராஜ், விமல்ராஜ், சத்யபிரியா, கிட்டி ஆகியோர் நடித்துள்ளனர். வி.ரமேஷ் தயாரித்துள்ள இப்படத்தை செல்வா இயக்கினார்.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். மலரே மவுனமா...என்ற மெலடி பாடலை இப்போது கேட்டாலும் நாம் காற்றில் பறப்பதைப் போன்ற ஒரு அதிசயிக்கத்தக்க லேசான உணர்வைப் பெறுவோம். பாடலை இதுவரை கேட்காதவர்கள் உடனே கேட்டுப்பாருங்கள். கண்ணிலே...கண்ணிலே...ஆலமரம்..., புத்தம் புது...பாடல்களும் சூப்பர் ரகங்கள் தான்.   

முதல்வன் 

முதல்வன் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் ஷங்கர், ரமணா மாதேஷ் தயாரிப்பில் வெளியானது. சுஜாதா கதை எழுதினார். இப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல், ரகுவரன், லைலா, விஜயகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் டப்பிங்கில் தெலுங்கில் வெளிவந்தது. இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது. இத் திரைப்படம் 2000ம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.

இப்படத்தில் இடம்பெறும் ஹைலைட்டான காட்சி முதல்வர் ரகுவரனுடன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ஜூன் பேட்டி எடுக்கும் காட்சி. அடுத்து அர்ஜூன் ஒருநாள் முதல்வராக அசத்தும் காட்சி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட். குறுக்கு சிறுத்தவளே..., முதல்வனே....வனே...உப்புக்கருவாடு....அழகான ராட்சசியே...உளுந்து வெதைக்கையிலே....ஷக்கலக்க பேபி....பாடல்கள் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் துள்ளல் இசைப் பாடல்களாக வலம் வந்தன. இவற்றில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு மட்டும் சுஷ்மிதா சென் நடனமாடினார். இந்தப் பாடலை பாடியிருப்பவர் வசுந்தரா தாஸ். இவர் ஹேராம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும், சிட்டிசன் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ரிதம் 

ரிதம் 2000த்தில் வெளிவந்த தமிழ்ப்படம். அர்ஜுன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், லட்சுமி, நாகேஷ், ரம்யா கிருஷ்ணன், ராஜூ சுந்தரம் உள்பட பலர் நடித்த இப்படத்தை வஸந்த் இயக்கினார். பிரமிட் நடராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த படம். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகங்கள். நதியே...நதியே...காற்றே என் வாசல் வந்து....நிலமே பொறு நிலமே...அன்பே இது....அய்யோ பத்திக்கிச்சு....பாடல்கள் மெஹா ஹிட் ரகங்கள்.

இந்தப் படத்தில் வித்தியாசமான அர்ஜூனைப் பார்க்கலாம். ஆக்ஷன் படங்கள் மட்டும் தான் அர்ஜூனுக்கு வரும் என்று நினைத்த ரசிகர்கள் மத்தியில் மெலடியான கேரக்டரிலும் அர்ஜூன் வெளுத்து வாங்குவார் என நிரூபித்த படம். இப்படத்தின் இயக்குனர் வசந்த் கூறுகையில், அர்ஜூன் ஆக்ஷன் கிங் மட்டுமல்ல. ஆக்டிங் கிங்கும் தான் என்றார்.

ரிதம் குறித்து இயக்குநர் வசந்தின் நீண்ட விளக்கம் இதுதான்... 

’’ ‘ரிதம்’ படத்துக்கான கதை முடிவானதுமே நான் வைத்த தலைப்பு ‘ரிதம்’தான். வாழ்க்கையின் ‘ரிதம்’ என்றுதான் படத்தின் கதையையும் தலைப்பையும் ‘ரிதம்’ எனும் விஷயத்தையும் பார்த்தேன். பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனக் கொண்டதுதானே வாழ்க்கை.
‘வாழ்க்கை சந்தோஷமா இருக்கா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்றுதான் சொல்லுவோம். ’சரி... தினமும் வருத்தமாத்தான் இருக்கா?’ என்று கேட்டால், உண்மையாக பதில் சொல்வதாக இருந்தால், அதற்கும் ‘இல்லை’ என்றுதான் பதில் வரும். அப்படின்னா, வாழ்க்கை எப்படி இருக்கு? ஒருநாள் வருத்தமா இருக்கு, ஒருநாள் சந்தோஷமா இருக்கு.

வாழ்க்கையை நான் எப்படிப் பாக்கிறேன்னா... தினமும் நைட் மட்டுமா இருக்கு? பகலும்தானே இருக்கு. அதேபோல விடியாத இரவென்று ஒன்று கிடையவே கிடையாது. முடியாத துன்பம்னு ஒண்ணு கிடையவே கிடையாது.

எனக்கு இது ரொம்பப் பிடிக்கும். பின்னாடி படம் பண்ணும்போது, ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ பாட்டுல, நா.முத்துக்குமார்கிட்ட சொன்னேன். அவர் எழுதிக்கொடுத்தார்... ’வளைவில்லாமல் மலை கிடையாது, வலியில்லாமல் மனம் கிடையாது, வருந்தாதே வா’ன்னு அற்புதமான வரிகளை எழுதியிருந்தார். எங்கேயாவது, மலைல ஏறணும்னா... வளைஞ்சு வளைஞ்சுதான் போகணும். வாழ்க்கையோட உயரத்துக்குப் போகணும்னா, நாம வளைஞ்சு வளைஞ்சுதான் போயாகணும்.
வளையறதெல்லாம் வலின்னு நினைச்சா, வலியில்லாம மனம் கிடையாது. வருந்திக்கிட்டே இருக்கக்கூடாது. அந்த வருத்தங்களையெல்லாம் விட்டுட்டு மேலே போகணும். இதுதான் ‘ரிதம்’ படத்தோட தீம். அதாவது, வாழ்க்கைங்கறது தினமும் சந்தோஷமாவும் இருக்கறதில்ல் வருத்தமாவும் இருக்கறதில்ல. அது, சந்தோஷத்திலேருந்து வருத்தத்திற்கும் வருத்தத்திலேருந்து சந்தோஷத்திற்குமான ஒரு வட்டச்சுழல். ஒரு சக்கரம் மாதிரி போயிக்கிட்டே இருக்கு. ஆக, அதுல நாம போயிகிட்டே இருக்கணும். பயணம் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

வாழ்க்கைங்கறதே ரொம்ப அபூர்வமான விஷயம். அவ்வையார் சொன்னது மாதிரி ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’. நாம ஒரு கொசுவாப் பிறந்திருந்தோம்னா, ஒருநிமிஷம் ‘பேட்’ல அடிச்சுப் போட்டுருப்பாங்க. நாம எவ்வளவோ ஜென்மங்கள்ல, எவ்வளவோ புண்ணியங்கள் பண்ணி மனுஷனாப் பொறந்திருக்கோம். அதனால, மனுஷனாப் பொறந்த முக்கியத்துவத்தை உணரணும்.

ரொம்ப ஈஸியா, எல்லா விஷயத்துக்காகவும் இப்போ தற்கொலை பண்ணிக்கறதைப் பாக்கும்போது மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. பரிட்சைக்காக தற்கொலை பண்ணிக்கறது, காதலுக்காக தற்கொலை பண்ணிக்கறதுன்னு எதுக்காகவுமே தற்கொலை பண்ணிக்கறது தப்புன்னு நினைக்கிறேன். இதை வேற விதமா ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்துல கூட சொல்லிருப்பேன்.

இதையெல்லாம் எதுக்காகச் சொல்றேன்னா, இதெல்லாம் சேர்ந்ததுதான் ‘ரிதம்’ படத்தோட தீம். ஆகவே, வாழ்க்கைங்கறது வாழ்றதுக்கு. எது நடந்தாலும் வாழணும். ரொம்பப் பிடிச்சவங்க இறந்து போயிட்டாங்கன்னா, அதுக்காக நாமளும் இறந்துபோயிடமுடியாது. நாம வாழணும். அட்லீஸ்ட்... நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க, எதுக்காகலாம் வாழ்ந்தாங்களோ, அதுக்காகவாவது வாழணும். அதுதான் வாழ்க்கைன்னு நான் நினைக்கிறேன். அதுதான் தீம். அதுக்காகத்தான் ’ரிதம்’ங்கற படமே எடுத்தேன். வாழ்க்கையும் ரிதம் மாதிரி இருக்கணும். பர்ஃபெக்ட்டா இருக்கணும். இசையோட தளம் ஒரு ரிதத்தோட எப்படி இருக்கோ, வாழ்க்கையும் அப்படி சரியா இருக்கணும்.

அதுக்காகத்தான் ‘ரிதம்’னு டைட்டில் வைச்சேன். அதையும் தவிர, ரஹ்மானோட இசை. முதன்முதல்ல ரஹ்மானோட சேர்ந்து பண்றேன். இசை சம்பந்தமா ஒரு டைட்டில் இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன். அதையும் தாண்டி... ‘இசைபட வாழ்தல்’தானே. அதுதான் ரிதம்.’’

From around the web

Trending Videos

Tamilnadu News