5 நாளில் ரூ.30 கோடி - வசூலில் சாதனை படைத்த சுல்தான்

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நந்தனா, லால், நெப்போலியன் உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் சுல்தான். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், படம் வெளியான பின் ரசிகர்களிடம் சுல்தான் வரவேற்பை பெறவில்லை. இணையதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில், படம் தெலுங்கு படம் போல இருக்கிறது என்கிற கருத்து பரவலாக எழுந்தது. கதையும் பெரிதாக கவரும்படி இல்லை. அதாவது புதிதாக இல்லை. விவசாய நிலத்தை அபகரிக்கும் நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து கார்த்தி எப்படி விவசாயத்தை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சுல்தான் நல்ல வசூலை பெற்று வருகிறது. மாஸ்டருக்கு பின் இப்படத்தை பலரும் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். கார்த்தி நடித்து இதுவரை வெளியான படங்களில் சுல்தான் திரைப்படத்திற்குதான் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்ததாக கூறப்படுகிறது. படம் வெளியாகி 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.15 கோடிக்கு மேல் வசூல் செய்தது. உலக அளவில் ரூ.25 கோடி வசூலை தாண்டிவிட்டதாக கூறப்பட்டது. தற்போது படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழகத்தில் ரூ.19 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளது. அதேபோல், கேரளாவில் 1.50 கோடியும், ஆந்திராவில் ரூ.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.1 கோடியையும் இப்படம் வசூல் செய்துள்ளது. வெளிநாட்டிலும் இப்படத்தின் வசூலையும் கணக்கிட்டால் இப்படம் இதுவரை ரூ.30 கோடியை வசூல் செய்திருக்கும் என நம்பப்படுகிறது.
இப்படத்தின் வசூல் சுல்தான் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
]