கோலிவுட்டை தொடர்ந்து காப்பாற்றி வரும் சுந்தர் சி!.. இவர் பெஸ்ட் டைரக்டர் இல்லயா?!..
Sundar C: தயாரிப்பாளர்களுக்கு சினிமா என்பது வியாபாரம் என்றால் ரசிகர்களுக்கு பொழுதுபோக்குதான். இரண்டரை மணி நேரம் தங்களின் கவலைகளை மறந்து ரிலாக்ஸ் செய்வதற்காகவே அவர்கள் தியேட்டருக்கு போகிறார்கள். அங்கும் அவர்களை கருத்து, கண்ணீர், சோகம், நசுக்கிட்டான், பிதிக்கிட்டான் என சொல்லி வகுப்பெடுப்பதை பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவதில்லை.
ஆனால், அப்படி படமெடுக்கும் இயக்குனர்கள்தான் இங்கே சிறந்த இயக்குனர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களுக்கு விருதுகளும் கிடைக்கிறது. அவர்களின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களின் படங்களில் கருத்து சொல்லமாட்டார்கள். அழகான உணர்வும், வாழ்வியலும், மனித உறவுகளில் உள்ள மேன்மைகளும் இருக்கும். அதனால்தான் அவர்கள் இப்போதும் பேசப்படுகிறார்கள்.
ஒரு திரைப்படம் அழகான கவிதை போல மனதை வருட வேண்டும். இல்லை மனதை உலுக்க வேண்டும். இல்லையேல், ரசிகர்களுக்கு ஜாலியான அனுபவத்தை கொடுத்து அவர்களின் மனக்கவலைகளை மறக்கடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வருபவர் இயக்குனர் சுந்தர்.சி.
ரசிகர்கள் தியேட்டரிலிருந்து சிரித்துக்கொண்டே தியேட்டரிலிருந்து போக வேண்டும். தயாரிப்பாளருக்கு லாபம் வர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து கடந்த 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர் சி. இவரின் இயக்கத்தில் வெளிவந்த 90 சதவீத படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.
சுந்தர் சி: போன வருட பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வந்து தோல்வி அடைந்தன. வருடத்தின் துவக்கமே தோல்வி படங்கள் என்பது கோலிவுட்டில் செண்டிமெண்ட்டாக பார்ப்பார்கள். அதன்பின் வந்த சில படங்களும் ஓடவில்லை. 2024 மே மாதம் வந்த அரண்மனை 4-தான் சூப்பர் ஹிட்டாக அமைந்து கோலிவுட்டுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது.
மதகஜராஜா: இப்போது இந்த வருட பொங்கலுக்கு கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா போன்ற படங்கள் வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியிருக்கிறது. இதில் கேம் சேஞ்சர் 450 கோடி செலவில் உருவானது. வணங்கான் மட்டும் கொஞ்சம் தப்பித்திருக்கிறது என சொல்கிறார்கள். அதேநேரம், சுந்தர்.சி 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய மதகஜராஜா படம் வெளியாகி கோலிவுட்டை காப்பாற்றி இருக்கிறது. இந்த படம் ஓடும் எல்லா தியேட்டர்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு படத்தின் வெற்றிதான் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் என எல்லோருக்கும் உற்சாகத்தை கொடுக்கும். அப்படி ஒரு உற்சாகத்தை இப்படம் கொடுத்திருக்கிறது.
முன்னணி நடிகர்கள்: ஆனால், பெரிய நடிகர்கள் சுந்தர்.சி பக்கம் போவது இல்லை. துவக்கத்தில் இருந்து சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்களை வைத்தே படமெடுத்து வந்தார். இப்போது விமல், ஜீவா போன்ற சின்ன நடிகர்களை வைத்து படமெடுத்து வருகிறார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்கள் சுந்தர்.சி பக்கம் போவதே இல்லை. அவ்வளவு ஏன்?.. காமெடி படங்களை விரும்பும் சிவகார்த்திகேயன் கூட சுந்தர் சி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு சுந்தர்.சி பெரிய இயக்குனராக தெரியவில்லை என்பதே உண்மை. பல கோடி செலவில் கங்குவா படத்தை எடுத்து அதில் நடித்து பிளாப் கொடுத்த சூர்யா சுந்தர் சி-க்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.
விஜயை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என பல வருடங்கள் ஆசைப்பட்டார். ஆனால், விஜய் பிடி கொடுக்கவே இல்லை.என் படத்தை மக்கள் ரசிப்பார்கள். தயாரிப்பாளர்களுக்கு லாபம் வரும். ஆனால், சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை என மதகஜராஜா சக்சஸ் மீட்டில் ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார் சுந்தர்.சி.
பல கோடிகளை கொட்டி பெரிய இயக்குனர்கர்களின் படங்களில் நடித்து பிளாப் கொடுப்பதை விட சுந்தர்.சி போன்ற இயக்குனர்களின் படங்களில் முன்னணி நடிகர்கள் தாராளமாக நடிக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யமாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு சுந்தர் சி பெரிய இயக்குனர் இல்லை. ஆனால், 2 படங்கள் ஹிட் கொடுத்த இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து பிளாப் கொடுப்பார்கள்.
அவர்களுக்கு எப்படியோ!.. கோலிவுட்டை தொடர்ந்து காப்பாற்றி வரும் சுந்தர்.சி. மக்களின் இயக்குனர்தான்!....