‘ரஜினி 173’ படத்திலிருந்து விலகுகிறாரா? அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சுந்தர் சி
தற்போது சுந்தர் சி திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கடந்த சில நாள்களாகவே சுந்தர் சி பற்றிய செய்திதான் அடிக்கடி செய்திகளில் வந்து கொண்டிருந்தன. அதற்கு காரணம் சினிமாவில் இரு பெரும் லெஜெண்டுகளான ரஜினி கமல் இருவருடனும் இணைந்து சுந்தர் சி ஒரு படம் பண்ண போகிறார் என்பதுதான். கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அந்தப் படத்தை சுந்தர் சி இயக்குகிறார் என்பதுதான் அந்த செய்தி.
சமீபத்தில்தான் அந்தப் படத்திற்கான பூஜையும் நடைபெற்றது. அது சம்பந்தமான புகைப்படம் வீடியோ இணையத்தில் வைரலானது. அது ரஜினி 173வது திரைப்படமாகும். தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி அந்தப் படத்தை முடித்துவிட்டு சுந்தர் சியுடன் இணைய போகிறார் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்தப் படத்திலிருந்து சுந்தர் சி விலகுவதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் மிகவும் வருத்தத்துடன் இந்த செய்தியை கூறுகிறேன் என பதிவிட்டு ரஜினி 173 படத்திலிருந்து தான் விலகுவதாக கூறியிருக்கிறார் சுந்தர் சி. மேலும் அதில் அவர் கூறியது என்னவெனில், வாழ்க்கையில், நமக்காக வகுக்கப்பட்ட பாதை நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், அதைப் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.
இந்த இரண்டு ஐகான்களுடனான எனது தொடர்பு நீண்ட காலம் பழமையானது, நான் எப்போதும் அவர்களை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன்.
கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் எனக்கு என்றென்றும் போற்றப்படக் கூடிய தருணங்களாகவே இருந்திருக்கின்றன. அவை எனக்கு மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளன,

மேலும் நான் முன்னேறும்போது அவர்களின் உத்வேகத்தையும் ஞானத்தையும் தொடர்ந்து தேடுவேன். இருந்தாலும் இந்த படத்திலிருந்து விலகுகிறேன் என்றாலும் தொடர்ந்து நான் எண்டெர்டெயின் பண்ணிக் கொண்டேதான் இருப்பேன் என கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு குஷ்புவின் கணக்கிலிருந்து வெளியாகியிருக்கிறது. வெளியான இரண்டு நிமிடத்திலேயே அந்த அறிவிப்பு அழிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இனிமேல் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
