Sigma: ஜேசன் சஞ்சய் படத்தை புரமோட் பண்ணும் அஜித் மேனேஜர்!.. பின்னணியில் உள்ள காரணம்!..
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு வெளியான போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் தொடர்பில் இல்லை. அவர் தனியாக வசித்து வருகிறார். அவரின் மனைவி சங்கீதா மற்றும் மகன், மகள் ஆகியோர் லண்டனில் வசிக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் தனது அப்பாவின் உதவி எதுவுமில்லாமல் சினிமாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்ட ஜேசன் லைக்காவுடன் கை கோர்த்திருக்கிறார். அதே நேரம் சங்கீதாவின் அப்பாவும் லைக்கா சுபாஸ்கரனும் நெருக்கமானவர்கள் என்பதால் இது நடந்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்துவந்தார். இன்று காலை இந்த படத்தின் தலைப்பு சிக்மா (Sigma) எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த போஸ்டரில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் பெயர் இருக்கிறது. ஜேசனின் அப்பா விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் 'தி ரூட் (The Root)’ என்கிற பப்ளிசிட்டி நிறுவனத்தை வைத்திருக்கிறார். ஆனால், ஜேசன் அங்கு போகாமல் சுரேஷ் சந்திரனுடன் போயிருப்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

பட அறிவிப்பு வெளியான முதலே ஜேசன் சஞ்சயை அஜித்தும், சுரேஷ் சந்திராவும் வழி நடத்தியதாக சொல்லப்படுகிறது. பல மாதங்கள் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் வேறு தயாரிப்பாளரிடம் செல்லலாமா என ஜேசன் யோசித்துக் கொண்டிருந்தபோது அவர் சுரேஷ் சந்திராவிடம் இதுபற்றி ஆலோசனை செய்திருக்கிறார். அப்போது போனை வாங்கி பேசிய அஜித் ‘உனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் கேள். லைக்கா வேண்டாம் என்றால் உனக்கு வேறு ஒரு தயாரிப்பாளரை நான் சொல்கிறேன்’ என்று அறிவுரை சொன்னதாகவும் அப்போது செய்திகள் கசிந்தது.

வெளி உலகில் விஜய்க்கும் அஜித்துக்கும் போட்டி என்பது போல தெரிந்தாலும் இருவரும் நண்பர்கள்தான். விஜய் மனைவி சங்கீதாவும், அஜித் மனைவி ஷாலினியும் நல்ல தோழிகள். இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அந்த வகையில் ஜேசன் சஞ்சய் மீது அஜித் அக்கறையோடு இருப்பதாக பார்க்கப்படுகிறது.விஜய் கண்டுகொள்ளாத நிலையில் அஜித் ஜேசனுக்கு உதவி செய்து வருகிறார். அதனால்தான் சிக்மா படத்தின் பப்ளிசிட்டியை சுரேஷ் சந்திரா செய்து வருகிறார் என்கிறார்கள்.
