
Cinema News
இதுவரை 250 கல்யாணங்களை நிறுத்தி இருக்கிறேன்.. சூர்யா ஓப்பன் டாக்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. படத்திற்கு படம் தன்னுடைய கதாபாத்திரங்களை மாற்றியமைத்து தன்னை வருத்தி ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருகிறார். நடிப்பு அரக்கன் பட்டியலில் கமல்ஹாசனுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் ஒரு பெயரை சொல்ல வேண்டும் என்றால் அதில் சூர்யாவின் பெயர் கண்டிப்பாக இடம் பெறும். என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் தனக்கான வெற்றியை கைப்பற்ற சில வருடங்களாக தடுமாறி வருகிறார்.
இரண்டு வருடங்கள் அயராது உழைத்த கங்குவா திரைப்படம் ஒரு வாரத்திலேயே திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது. இப்படி தன்னை வருத்தி கஷ்டப்பட்டு உழைத்து நடிச்சாலும் தனக்கான வெற்றி என்பது சூர்யாவிற்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்நிலையில் இவரின் சொந்த தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த ரெட்ரோ திரைப்படம். முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் சுமாரான வெற்றியை பதிவு செய்திருந்தது. சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள ”கருப்பு” திரைப்படம் ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்த முறை சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது என சினிமா விமர்சகளின் கருத்தாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க சூர்யாவிடம் மற்றொரு நல்ல குணம் என்னவென்றால் மற்ற ஹீரோக்களை போல் பணத்திற்காக நடித்தோம், சென்றோம் என்று இல்லாமல் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வருகிறார்.

தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மேற்படிப்பிற்கு வசதி இல்லாத மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் கனவை பூர்த்தி செய்து வருகிறார். கடந்த பத்து வருடங்களாக சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா என தனது குடும்பத்தாருடன் இந்த பணியை தொடர்ந்து வருகிறார். இதுவரை 4000 மாணவர்கள் சூர்யாவால் பயனடைந்துள்ளார்கள். அதிலிருந்து உருவான டாக்டர் மற்றும் இன்ஜினியர்களால் பல குடும்பங்களின் பொருளாதார நிலை மாறி உள்ளது.
இன்றைக்கு அந்த மாணவர்களும் தங்கள் பங்கிற்கு அவர்களால் முடிந்த சிறு தொகையை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கி வருகிறார்கள். அதன் மூலம் இன்னும் பல மாணவர்களின் வாழ்க்கையை அந்தப் பணம் மாற்றும். இந்நிலையில் பேட்டி ஒன்றில் சூர்யா,” நாங்கள் இதுவரை 250 க்கும் மேற்பட்ட திருமணங்களை நிறுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது கிராமப்புறங்களில் 12 வது வகுப்பு முடித்தவுடன் அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து விடுவார்கள். ஆனால் அந்தப் பிள்ளைங்க படிக்கிற ஆசையில இருப்பாங்க”.
”அவங்கள படிக்க வைக்க திரும்ப கூட்டிட்டு வர நிறைய போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கிறோம். அது மாதிரி இதுவரை ஒரு 250 திருமணங்களை தடுத்து நிறுத்தி இருப்போம்”. என்று கூறியுள்ளார். ஒரு நடிகராக சும்மா நடித்தோம், காசு வாங்கினோம், சென்றோம் என்று கடமைக்கு இல்லாமல் சமூக அக்கறையுடன் இந்த சமூகத்திற்கு பல நன்மைகளை செய்து வரும் சூர்யாவிற்கு மக்கள் மத்தியில் பாராட்டு கிடைக்கப்பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இவ்வளவு நன்மை செய்யும் மனுஷனுக்கு அடுத்தடுத்த படங்கள் ஹிட் படங்களாக அமைய வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.