20 ஆண்டுகள் காதலும் புரிதலும்... மீண்டும் திரையில் இணைய விருப்பம் தெரிவித்த சூர்யா - ஜோதிகா!
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, தங்களது திருமண வாழ்க்கையின் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தங்களது குடும்ப வாழ்க்கை, தொழில் பயணம் மற்றும் மீண்டும் இணைந்து நடிக்கும் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.
திரையுலகில் பிஸியாக இருந்தாலும், குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை சமநிலையுடன் கொண்டு செல்வதே தங்களது வெற்றியின் ரகசியம் என தெரிவித்துள்ளனர். சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைகளைப் படைத்ததுடன், ரசிகர்களிடையே அவரது நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தன. அதேபோல் ஜோதிகாவும் பாலிவுட்டில் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

உடலழகை விட உடல் ஆரோக்கியமே முக்கியம் என்ற எண்ணத்தில் இருவரும் தொடர்ந்து உடற்பயிற்சி, யோகா மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடித்து வருவதாக தெரிவித்துள்ளனர். வெளிப்புற அழகை விட மன உறுதியும் உடல் வலிமையும் தான் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்தாலும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதை, அன்பு மற்றும் புரிதல்தான் தங்களது உறவை வலுப்படுத்தியதாக சூர்யா - ஜோதிகா தெரிவித்துள்ளனர். கருத்து வேறுபாடுகள் வந்தாலும், அதை பேசித் தீர்த்துக் கொள்வதே தங்களது வாழ்க்கை முறையாக இருப்பதாகவும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

மேலும், ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் தங்களது திரை இணைவு குறித்து பேசிய இருவரும், "சரியான கதை அமைந்தால் மீண்டும் ஒன்றாக நடிக்க விரும்புகிறோம். ரசிகர்களின் அந்த ஆசையை நாங்களும் புரிந்துகொள்கிறோம். நல்ல கதைக்காக காத்திருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்த சூர்யா - ஜோதிகா தம்பதியினர், மீண்டும் ஒரே படத்தில் இணைவார்கள் என்ற செய்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
