'நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்'... 'விஷ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆடியோ விழாவில் சூர்யாவின் உருக்கமான பேச்சு!
'விஷ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோவையில் திருவிழா போல நடைபெற்றது. இந்த விழாவில், சூர்யாவின் உருக்கமான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தனது படத்தின் வசனத்துடன் பேச்சைத் தொடங்கிய சூர்யா, "இந்த ஆடியோ லான்சை நீங்கள் திருவிழாவாக மாற்றிவிட்டீர்கள். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி," என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து தனது பிறந்தநாளைப் பற்றி பேசிய அவர், "ஒரு காரணத்திற்காக நான் என் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. ஆனால் நீங்கள் எல்லோரும் என் பிறந்தநாளை எப்படி கொண்டாடினீர்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். 5,000-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்திருக்கிறீர்கள். இன்னும் நிறைய நற்பணிகளை செய்திருக்கிறீர்கள். இந்த அன்புக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்," என்றார்.
கோவையுடனான தனது பாசத்தை வெளிப்படுத்திய சூர்யா, "கோயம்புத்தூர் என்னுடைய சொந்த ஊர். இந்த நகரத்துடன் எனக்கு நிறைய அழகான நினைவுகள் இருக்கின்றன. இங்கு வருவது எப்போதும் ஒரு தனி மகிழ்ச்சி," என்று கூறினார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரைப் பாராட்டிய அவர், "ஜி.வி. பிரகாஷ் எப்போதுமே என் மீது ஒரு தனி அக்கறை வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி," என்றார்.
நடிகை மமிதா பைஜுவைப் பற்றி பேசிய சூர்யா, "மமிதா... உங்களுக்கு இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது. உங்கள் எனர்ஜி முழுப் படத்திலும் தெரியும். அதுமட்டுமல்ல, இந்தப் படத்திற்காக தமிழில் நீங்களே டப்பிங் பேசியிருக்கிறீர்கள். அதற்கும், இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததற்கும் நன்றி," என்று பாராட்டினார்.
நட்பைப் பற்றிப் பேசிய சூர்யா, "எனக்குத் தெரிந்த ஒரே 'ஷிப்' ஃபிரெண்ட்ஷிப் தான். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்," என்று கூறியதற்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். ரசிகர்களுடனான தனது 28 ஆண்டுகால பயணத்தை நினைவுகூர்ந்த அவர், "28 ஆண்டுகளாக என்னை உங்கள் கைகளில் தூக்கி நிறுத்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் நீங்கள் மட்டும்தான்," என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மேலும், "இந்த உலகத்திற்கு வரும்போது யாரும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வருவதில்லை. நமக்கு மிகவும் தேவையானது ஒன்று மட்டும்தான்... அது நம்பிக்கை. நம்பிக்கை இருந்தால் நாம் ஆசைப்படும் எதையும் சாதிக்க முடியும்," என்றார்.
"தாலி கட்டும் வரை மட்டும் காதல் இருக்கக் கூடாது. திருமணமான பிறகும் தினமும் காதலிக்க வேண்டும். 20 ஆண்டுகள் ஆனாலும் அதே அன்பையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும். மனிதர்கள் மாறலாம், ஆனால் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பும் காதலும் மாறக் கூடாது," என்று அவர் கூறினார்.
மேலும், "வீட்டில் பல சமரசங்களைச் செய்து, குடும்பத்தை தாங்கி நிற்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு நாம் இன்னும் பல மடங்கு அதிகமான அன்பையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துக்கு அரங்கமே கைதட்டி வரவேற்பு அளித்தது.
