சூர்யா கார் தரலைன்னாலும் பரவாயில்லை!.. அட்லீஸ்ட் இதையாவது செய்வாரா?.. சுவாசிகா எதிர்பார்ப்பு!..

 
swasika

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக கவனம் ஈர்த்து வரும் ஸ்வாசிகா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ‘கருப்பு’ திரைப்பட அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக படத்தில் தான் நடித்த சில காட்சிகள் நீக்கப்பட்டதையும், அதுகுறித்து இயக்குநர் பாலாஜி எடுத்த முடிவையும் அவர் புரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

மலையாள தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் தனது பயணத்தை தொடங்கிய ஸ்வாசிகா, தற்போது தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அவர், அதன் பின்னர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

அந்த பேட்டியில் பேசிய ஸ்வாசிகா, “கருப்பு படத்தில் நான் நடித்த சில காட்சிகள் இறுதிப் பதிப்பில் இடம்பெறாதது முதலில் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் லப்பர் பந்து திரைப்படம் வெளியான மூன்றாவது நாளிலேயே இயக்குநர் பாலாஜி என்னை தொடர்புகொண்டு, ‘லப்பர் பந்தில் பார்த்தது போன்ற கதாபாத்திரம் இது இருக்காது. வேறொரு கோணத்தில் இருக்கும். உங்களுக்கு ஓகேவா?’ என்று கேட்டார். எனக்கு கதை மற்றும் அந்தக் கதாபாத்திரத்தின் சில முக்கியமான காட்சிகள் மிகவும் பிடித்திருந்தது” என்று கூறியுள்ளார்.

மேலும், “லப்பர் பந்து மற்றும் மாமன் படங்களில் நான் நடித்த கதாபாத்திரங்களை விட வித்தியாசமான ஒரு வேடமாக கருப்பு படத்தில் அமைந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் படத்தின் நீளம் காரணமாக சில காட்சிகளை நீக்கியதாக பாலாஜி என்னிடம் நேரடியாக கூறிவிட்டார். அதனால் எனக்கு எந்த வருத்தமோ, பிரச்சனையோ இல்லை. ஆனால் இனிமேல் கதைகளை தேர்வு செய்வதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த அனுபவம் எனக்கு கற்றுக்கொடுத்தது” என தெரிவித்துள்ளார்.

இதனுடன், கருப்பு படத்தில் பணியாற்றிய சிலருக்கு நடிகர் சூர்யா கார் பரிசாக வழங்கி வருவதாக பரவி வரும் தகவல்கள் குறித்தும் ஸ்வாசிகா நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். “எனக்கு கார் வராது. ஆனால் சூர்யா சார் பிரியாணி போட்டாலே போதும். அது எனக்கு கார் பரிசு கொடுத்ததற்கு சமம்,” என்று சிரித்தபடியே அவர் கூறியுள்ளார். இந்த பதில் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

எளிமையான பேச்சு, யதார்த்தமான நடிப்பு மற்றும் தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஸ்வாசிகா, எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் மேலும் பல முக்கிய வாய்ப்புகளை பெறுவார் என்ற எதிர்பார்ப்பு திரையுலக வட்டாரங்களில் நிலவி வருகிறது.

Tags

From Around the web