Rajini 173: ரஜினி பட பிரச்சினை.. யார் மேல தப்பு? டிராஜேந்திரன் கொடுத்த விளக்கம்
ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி ஏன் விலகினார் என்பதை பற்றி ஆராய்ச்சி பண்ணும் பொழுது என் மனதில் ஒன்றே ஒன்று மட்டும் தான் தோன்றுகிறது. குலமகள் ராதை படத்தில் ஒரு அருமையான பாடல் வரும். உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி என்ற ஒரு அருமையான வரிகள் அமைந்த பாடல் அது. இந்தப் பாடல் வரிகளை எடுத்து நான் இங்கு பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் இந்தப் படத்தை ஒரு பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க வேண்டும். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்ற மாதிரி அவரை புரிந்து கொண்ட இயக்குனரை, நல்ல மாஸ் மசாலா தெரிந்த இயக்குனரை நல்ல நகைச்சுவை படங்களை எடுக்கக்கூடிய திறமை படைத்த இயக்குநரை இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் நினைத்த அந்த பிரம்மாண்டமான நட்சத்திரமான அந்த தயாரிப்பாளர் மேலும் தப்பில்லை.
அந்த பிரம்மாண்டமான படைப்பில் அந்த பிரம்மாண்டமான நட்சத்திர தயாரிப்பாளருக்கு கை கொடுக்க வேண்டும். அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் .அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலேயும் தப்பு இல்லை. அதே மாதிரி இப்படி இரு பெரும் துருவங்கள் இரு பெரும் நட்சத்திரங்கள் இரு பெரும் உச்சம் அவர்கள் சேர்ந்து தனக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் என்று சொன்னால் அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு முழு மூச்சுடன் பாடுபட்டு அதற்காக உழைத்து அதற்காக தன்னார்வத்துடன் செயல்பட்ட இயக்குனர் சுந்தர் சி அவர்கள் மேலும் குற்றமில்லை.
இவர்கள் 3 பேரும் எந்த சூழ்நிலையில் இந்த படத்தில் இப்படியான கால நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை பார்க்கும் பொழுது இது காலம் செய்த கோலம். அது தான் இந்த ஞாலம். இவர்கள் ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது என்ற காரணம் இந்த மூன்று பேருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் இந்த முடிவை பற்றி இன்றைக்கு முச்சந்தியில் உட்கார்ந்து கொண்டு 300 பேராக 3000 பேராக ஒரு மூன்று லட்சம் கருத்துக்களை விதவிதமாக மூக்கு வச்சு காது வச்சு கண்ணு வச்சு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய கேள்வி என்னவென்றால் நாட்டில் எவ்வளவோ பிரச்சனை நடக்கிறது. ஏன் சமீபத்தில் அனைவரையும் தள்ளாட வைக்கும் பிரச்சனை எஸ் ஐ ஆர் படிவத்தை நிரப்புவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் குழப்பங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி யாராவது கேள்வி கேட்டதுண்டா? இப்படி ஒரு படத்திற்கு பூஜை போடப்பட்டு அதிலிருந்து ஒரு இயக்குனரோ அல்லது நடிகரோ அல்லது இசையமைப்பாளர் விலகுவது என்பது இப்பொழுது மட்டும் அல்ல ஆரம்பகாலங்களில் இருந்து நடந்து வருகின்றது. அண்ணாமலை படத்தில் கூட வசந்த் முதலில் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட அதன் பிறகு அந்த படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கினார்.
அதே மாதிரி களத்தூர் கண்ணம்மா படத்தில் முதலில் டி பிரகாஷ் ராவ் என்ற ஒரு மாபெரும் இயக்குனர் தான் அந்த படத்தை இயக்கினார். அதில் சில காட்சிகளை பார்த்த அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் செட்டியார் சில கருத்துக்களை முன்வைக்க இந்த படத்திலிருந்து விலகுவதாக பிரகாஷ்ராவ் கூறினார். அதன் பிறகு தான் பீம்சிங் அந்த படத்தை இயக்கினார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு மாபெரும் கலைஞன் நடித்திருந்தார். அவர் தான் இப்போது ரஜினி படத்தின் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.
ஏன் நான் அந்த நட்சத்திரத்தின் பெயரை இங்கு குறிப்பிடவில்லை என்றால் இன்று நான் டி ஆர் டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு சேனலை ஆரம்பித்து இருக்கிறேன். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒரு நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்களின் பெயர்களை குறிப்பிடுவதில் சில பிரச்சினைகள் வருகிறது. அரசியலில் இருக்கக்கூடிய ராஜ்ய சபா எம்பியாக இருக்கக்கூடிய ஒரு இசையமைப்பாளரின் பெயரை சொன்னாலும் பிரச்சனையாகி விடுகிறது. அதனால் தான் அந்த பெயரை எல்லாம் சொல்லாமல் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்காக நான் வருத்தமும் அடைகிறேன் என டி ராஜேந்திரன் அவருடைய யூடியூப் சேனலில் இந்த கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
