Categories: Cinema News latest news throwback stories

இளையராஜாவுக்கு அந்த பெயர் வந்தது எப்படி தெரியுமா? – ஒரு சுவாரஸ்ய தகவல்..

இளையராஜா தற்போது தமிழ் இசையுலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ராஜாவாக திகழ்ந்து வருகிறார். கிட்டத்தட்ட 3 தலைமுறை ரசிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவின் இசை, காலம் உள்ளவரை தமிழ் இசை உலகில் நிலைத்துக்கொண்டே இருக்கும்.

இளையராஜா தொடக்கத்தில் தனது சகோதரர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் கச்சேரி இசைத்துக்கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவில் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு தனது சகோதரர்களுடன் சென்னை நோக்கி சென்றார்.

Ilaiyaraaja

அங்கே முதலில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் இசை பயின்றார். அதனை தொடர்ந்து அக்காலகட்டத்தில் மிக புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்த ஜிகே வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளரிடம் உதவியாளராக சேர்ந்தார். அதனை தொடர்ந்து “அன்னக்கிளி” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே ஹிட் பாடல்களை கொடுத்த இளையராஜா தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அவரை பார்ப்பதற்கு அவரது ஸ்டூடியோவுக்கு வெளியே பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கால் கடுக்க காத்திருப்பார்களாம். அந்தளவுக்கு மிகவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்தவர் இளையராஜா. இப்போதும் இளையராஜாவின் இசை அதே துள்ளலோடுதான் இருக்கிறது.

Ilaiyaraaja

இந்த நிலையில் இளையராஜாவிற்கு, இளையராஜா என்று பெயர் வந்ததற்கான காரணம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இளையராஜா இசையமைப்பாளராக “அன்னக்கிளி” திரைப்படத்தில் ஒப்பந்தமான காலகட்டத்தில் ஏ.எம்.ராஜா என்ற பிரபலமான இசையமைப்பாளர் ஒருவர் இருந்தாராம்.

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. அனைவரும் அவரை ராஜா என்றே அழைப்பார்கள். ஏற்கனவே ஏ.எம்.ராஜா என்ற சீனியர் ஒருவர் இருப்பதால் இவரை ஜூனியர் ராஜா என்று அழைக்கும் வகையில் அதனை தமிழ்ப்படுத்தி இளையராஜா என்று பெயர் கொடுக்கப்பட்டதாம். இவ்வாறுதான் இளையராஜாவுக்கு இளையராஜா என்று பெயர் வந்திருக்கிறது.

Arun Prasad
Published by
Arun Prasad