×

வானம் எனக்கொரு போதிமரம் வைரமுத்துவின் சத்தான வரிகள் 

 
vmu

வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும் என்று தன் முதல்பாடலிலேயே சத்தான வரிகளைத் தந்துள்ளார் கவிப்பேரரசர். இவர் எழுதிய முதல் பாடலான இது ஒரு பொன்மாலை பொழுது பாடலில் தான் இந்தப் பல்லவி வருகிறது. கருத்தாழமிக்க இந்தப்பாடல் இடம்பெற்ற படம் நிழல்கள். இந்தப்படத்தின் இயக்குனர் பாரதிராஜா. இப்படத்தில்தான் நடிகர் நிழல்கள் ரவியும் அறிமுகமானார். இப்படம் 1980ல் வெளியானது. தமிழ்நாடு அரசு ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது இந்த வாய்ப்பு வந்தது. 

தம் 18வது வயதில் முதல் படைப்பாக வெளிவந்தது வைகறை மேகங்கள். இது ஒரு மரபுக் கவிதைத் தொகுப்பு. இந்நூலுக்கு கவியரசர் கண்ணதாசன் அணிந்துரை எழுதியிருந்தார்.

கவிப்பேரரசு என்றாலே நம் நினைவுக்கு வருவது வைரமுத்து தான். இவர் தமிழ் மீது அளவு கடந்த பற்று கொண்டவர். இவர் சாதாரணமாக பேசினாலே தூய தமிழில் தான் பேசுவார். இவரது பேட்டிகளைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்துவிடும். தன் கவிபுனையும் ஆற்றலால் தரணியெங்கும் இவர்  புகழ் எட்டுத்திக்கும் ஒலித்தது. 

வைரமுத்து புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

 தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு இரு மகன்கள்.  பெயர்கள் மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து.

இவர் வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசிய கீதம், எனது பழைய பனையோலைகள், கவிராஜன் கதை, இரத்த தானம், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, தமிழுக்கு நிறமுண்டு, பெய்யெனப் பெய்யும் மழை, எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள், கொடி மரத்தின் வேர்கள் என கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். 

சுயசரிதையாக இதுவரை நான் என எழுதியுள்ளார். 

இவர் எழுதிய கட்டுரைகள் ஏராளம். அவற்றில் கல்வெட்டுக்கள், என் ஜன்னலின் வழியே, நேற்று போட்ட கோலம், ஒரு மௌனத்தின் சப்தங்கள், சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன், வடுகப்பட்டி முதல் வால்கா வரை, இதனால் சகலமானவர்களுக்கும், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், கொஞ்சம் தேனீர் நிறைய வானம், தமிழாற்றுப்படை என்பன குறிப்பிடத்தக்கவை. 

இவர் எழுதிய புதினங்கள் இவை தான்...வானம் தொட்டுவிடும் தூரம்தான், மீண்டும் என் தொட்டிலுக்கு, வில்லோடு வா நிலவே (வரலாற்று நாவல்), சிகரங்களை நோக்கி, ஒரு போர்களமும் இரண்டு பூக்களும், காவி நிறத்தில் ஒரு காதல், தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம் (இது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது), கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது), மூன்றாம் உலகப்போர் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது). 

இவர் படைப்புகளில் ஒலிநாடாக்களாக கவிதை கேளுங்கள், தேன் வந்து பாயுது ஆகியவை வந்துள்ளன. 

வைரமுத்து 1990ல் கலைமாமணி விருதையும், 2003ல் சாகித்ய அகாதமி விருதையும் (கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக), 2014ல் பத்ம பூசன் விருதையும் பெற்றுள்ளார். மேலும் சிறந்த தமிழ்த்திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருதை 6 முறை பெற்றுள்ளார். விருது பெற்ற பாடல்கள் இவை தான். 1985ல் வெளியான முதல் மரியாதை படத்திற்காக அனைத்துப் பாடல்களுக்கும் தேசிய விருது கிடைத்தது. 1992ல் வெளியான ரோஜா படத்திற்காக சின்ன சின்ன ஆசை பாடலுக்கு விருது கிடைத்தது. அதேபோல் கருத்தம்மா திரைப்படத்திற்காக போறாளே பொன்னுத்தாயி, 1994ல் வெளியான பவித்ரா திரைப்படத்திற்காக உயிரும் நீயே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது. 1999ல் வெளியான சங்கமம் திரைப்படத்திற்கு முதன்முறை கிள்ளிப்பார்த்தேன் பாடலுக்காகவும், 2002ல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக நெஞ்சில் ஜில் ஜில் ஜில் என்ற பாடலுக்கும், 2010ல் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது. 2016ல் வெளியான தர்மதுரை படத்திற்காக எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. 

இவருக்கு முதன்முதலாக தமிழக அரசின் சிறந்தப்பாடலாசிரியர் விருதை 1981ல் கார்த்திக், ராதா உள்பட பலர் நடித்த படம் அலைகள் ஓய்வதில்லை படத்திற்காகப் பெற்றார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 2006ல் அந்நியன் படத்திற்காகவும், 2008ல் பெரியார் படத்திற்காகவும், 2011ல் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காகவும் பெற்றார். 

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப்பதவியின் காலம் 3 ஆண்டுகள். 

இன்று பிறந்தநாள் காணும் கவிப்பேரரசருக்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துகள்

From around the web

Trending Videos

Tamilnadu News