Categories: Cinema News latest news throwback stories

ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத செய்! – ரஜினியை எச்சரித்த வில்லன் நடிகர்!..

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக இருந்துவரும் பிரபலங்களிடம் மற்ற நடிகர்கள் மரியாதையுடன்தான் நடந்துக்கொள்வார்கள். ஆனால் சில நடிகர்கள் அதற்கு விதி விலக்காக இருப்பார்கள்.

உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆரை எந்த நட்சத்திரமும் பேர் சொல்லி அழைக்கமாட்டார்கள். ஆனால் நடிகர் சந்திரபாபு, எம்.ஆர் ராதா போன்ற சில நடிகர்கள் மட்டும் எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைப்பதுண்டு.

ஆனால் ரஜினி அந்த அளவிற்கெல்லாம் இல்லை. அவர் அதிக வாய்ப்புகளை பெற்று வந்த காலக்கட்டத்தில் கூட பல நடிகர்களுடன் மிகவும் நட்பாக இருந்தவர். அதில் முக்கியமானவர் நடிகர் செந்தாமரை. ரஜினியின் பல படங்களில் இவர் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நட்பில் இருந்து வந்தனர். ஒருமுறை ரஜினிகாந்த் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்து பார்த்த செந்தாமரை “என்ன தண்ணி குடிச்சிட்டு இருக்கீங்க, வாங்களேன் சரக்கு சாப்பிடலாம்” என அழைத்துள்ளார். இப்படிதான் இவர்களின் நட்பு துவங்கியுள்ளது.

ரஜினியை எச்சரித்த செந்தாமரை:

ஒருமுறை ரஜினிகாந்திற்கும் அவரது மனைவி லதாவிற்கு பெரும் சண்டையாகிவிட்டது. ரஜினிகாந்திடம் கோபம் கொண்ட அவரது மனைவி தன் தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். ரஜினிகாந்தும் கோபத்தில் இருந்ததால் அவரை அழைத்துவர ரஜினிகாந்த் செல்லவில்லை.

இந்த விஷயம் எப்படியோ செந்தாமரையின் காதுகளுக்கு சென்றது. அந்த சமயத்தில் செந்தாமரையும் ரஜினி படத்தில்தான் நடித்துக்கொண்டிருந்தார். அவர் வேகமாக சென்று ரஜினியை பார்த்து “நீ என்ன தப்பா நினைச்சுக்கிட்டாலும் பரவாயில்லை ரஜினி.

நீ செய்யுறது ரொம்ப தப்பு. ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத செய். போய் உன் மனைவியை அழைச்சிட்டு வா. இதை நான் சொல்றேன்னு என் மேல கோபப்பட்டு இந்த படத்தில் இருந்து என்னை நீ தூக்குனாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை” என கூறியுள்ளார் செந்தாமரை.

அந்த அளவிற்கு ரஜினியிடம் உரிமையாக பழகிய நபராக செந்தாமரை இருந்துள்ளார்.

Rajkumar
Published by
Rajkumar