×

தமிழ்சினிமாவில் வில்லன்கள் அன்றும் இன்றும் 

நான் ஹீரோ இல்லடா.....வில்லன்டா....!
 
mn nambiyar

 தமிழ்சினிமாவின் தொடக்கக்காலத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வலிமைமிக்கதாகவே இருந்தன. அதேபோல் தோற்றத்திலும் வில்லனுக்கேற்ற ஆஜானுபாகுவான உடல்வாகு இருக்கும். வசனத்திலும், நடையிலும், பார்வையிலுமே மிரட்டும் வில்லன்களும் உண்டு. அப்போதெல்லாம் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், எம்.என்.நம்பியார் என்று ஏகப்பட்ட வில்லன்கள் படத்தை ஆக்கிரமித்துக்கொள்வார்கள். இவர்கள் கதாநாயகனுக்கு நிகராக போட்டி போட்டுக்கொண்டு படம் முழுவதும் தன் திறமையை நிலைநாட்டுவார்கள். முக்கியமாக சண்டைக்காட்சிகள் இயல்பானதாகவும், டூப் போடாமலும் எடுக்கப்பட்டிருக்கும். தவிர, வாள்வீச்சு, கத்திச்சண்டை, சிலம்பம், குத்துச்சண்டை ஆகியவற்றில் இயற்கையிலேயே திறன்மிக்கவர்களாக காணப்படுவர். இவர்களுக்கு எவ்வித கம்ப்யூட்டர் கிராபிக்ஸ_ம் தேவைப்படாது. 

     எல்;லாமும் ஒரிஜினல் என்று இருக்கும்போது அங்கு கணினிக்கு வேலையே இல்லை. தவிர, அப்போது கணினி கண்டறியப்படாத காலம். அப்படி இருந்தும் கூட பல்வேறு காட்சிகள் எப்படி எடுத்தார்கள் என்று வியக்கும் அளவில் தான் இருக்கும். அதுபோல அவர்கள் அதிகமாக வசனமும் பேச மாட்டார்கள். உடலைப் பார்;த்தாலே நம்மை பயமுறுத்தும் வகையில் காட்சியளிக்கும். குடியிருந்த கோவில் படத்தில் நம்பியாரைப் பார்க்கும்போதும், அசோகனை மொட்டைத்தலையுடன் வில்லனாகப் பார்;க்கும்போதும் நம்மை வியக்க வைக்கும் அந்த காட்சி அமைப்புகள். 

    ஆர்.எஸ்.மனோகர் வண்ணக்கிளி படத்தின் மூலம் வில்லன் நடிகரானார். அவர் தனது கம்பீர குரலில் பேசும் போதும், எம்.ஆர்.ராதா தன் காந்தக்குரலில் மட்டுமல்லாமல் பல்வேறு குரல்களாக மாற்றி மாற்றி பேசும்போதும் நமக்கு வில்லன் கதாபாத்திரம்  மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல், வில்லன் தவிர, இதர சாதாரண அடியாட்களும் கூட பிரமிப்பான தோற்றத்துடன் காட்சியளிப்பர். உதாரணத்திற்கு சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரு மொட்டைத்தலையுடன் உயர்ந்த தடியன் ஒருவன் சண்டை போடுவார். அதில் இருவரும் சகதிக்குள் கட்டிப்புரண்டு சண்டைப்போடும் காட்சி நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும். அப்போதெல்லாம் வில்லன் என்றால் கடா மீசை வைத்துக் கொண்டு மொட்டைத்தலையுடன் சுருட்டு பிடித்துக் கொண்டு சும்மா தளதளன்னு குண்டா உயரமாக வளர்ந்து நிற்பவராகவே சினிமாவில் காட்டப்படும். இவர்களே பிரபல வில்லனுக்கு அடியாளாக இருப்பர். சண்டைக்காட்சிகளில் கதாநாயகர்களிடம் செமத்தியாக அடி வாங்குவர்;.

    அக்கால பிரபல வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா, மகாதேவி படத்தில் தன் கம்பீரமான குரலில் பேசும் வீர வசனமான 'மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி' என்ற வசனம் அக்கால ரசிகர்களிடம் அதிகமாக பேசப்பட வைத்தது. அதேபோல் நம்பியார் பேசும் வீர வசனங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாயின. இன்று வரை நம்பியார், எம்.ஆர்.ராதா, அசோகன் ஆகியோரது குரல்களையே மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மேடையில் பேசி அசத்தி வருகின்றனர்.

    இக்காலத்தில் வில்லன்கள் ஸ்மார்ட்டாக காட்சியளிக்கின்றனர். அவர்கள் சண்டைப்போடுவது கிளைமாக்ஸில் மட்டும் தான். மற்றவை எல்லாம் மூளையால் போடும் சண்டையாகவே இருக்கும். உதாரணமாக பிரகாஷ்ராஜ் தனது வில்லன் கதாபாத்திரத்தை வழக்கமான தமிழ்சினிமாவிலிருந்து சற்று மாற்றி காட்டியிருப்பார். அதற்கு முன்வரை, வில்லன் நடிகர் படம் பூராவும், ஹீரோவிடம் பஞ்ச் வாங்குவார்கள். பிரகாஷ்ராஜ் அஜீத்குமாருடன் நடித்த ஆசை படத்தில் சைலன்டான வில்லனாகவும், விஜயுடன் நடித்த கில்லி படத்தில் பயங்கர வில்லனாகவும் நடித்து நம்மை பரவசப்படுத்துவார். விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் வில்லனாக நடித்துள்ள கலாபவன்மணி வி;த்தியாசமான வில்லன் வேடத்தை ஏற்று நடிப்பில் அசத்தி இருப்பார். 

சத்திரியன் படத்தில் வில்லனாக வரும் திலகன் பேச்சிலேயே மிரட்டியிருப்பார். நீ பழைய சத்திரியனா திரும்பி வரணும்டா...வந்து எங்கிட்ட மோதனும்டா....என்று அருமை நாயகம் கேரக்டரில் மலையாள வாடை வீசும் தமிழில் பொளந்து கட்டியிருப்பார்.

    செந்தாமரை, நாசர், நெப்போலியன், ஆனந்தராஜ், கனல் கண்ணன், பொன்னம்பலம், மன்சூர் அலிகான், அஜய், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும், ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இமேஜ் பற்றி சிறிதும் கவலைப்படாமல்  வில்லனாகவும் நடித்துள்ளனர். நடிகர் அர்ஜூன் கண்ணோடு காண்பதெல்லாம், சின்னா சின்னா, கர்ணா, இரும்புத்திரை, கடல் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது வில்லனுக்கான கதாபாத்திரத்தை ஹீரோவே கையில் எடுத்து ஆண்ட்டி ஹீரோ ரோல் ஏற்று நடித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். காலத்திலேயே இது தொடங்கிவிட்டது. அப்போது அவர் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் வில்லனாகவே நடித்திருப்பார். 1956ல் வெளிவந்த நல்லவீடு திரைப்படத்தில் சிவாஜி வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்திருப்பார். இதில் மனோகருக்கு நாயகன் வேடம். 1952ல் வெளியான தாயுள்ளம் படத்தில் ஜெமினிகணேசன் வில்லன் மனோகர் கதாநாயகன். 

    கமல் 1974ல் வெளியான குமாஸ்தாவின் மகள் படத்தில் பயங்கர வில்லனாக நடித்து இருப்பார். 1978ல் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருப்பார். இந்திரன் சந்திரன் படத்தில் ஒரு வேடத்தை வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.

அதுபோல் 2001-ல் வெளியான ஆளவந்தானில் மொட்டைத்தலையுடன் வில்லனாக வரும் தோற்றம் இப்படி எந்த ஒரு நடிகராலும் நடிக்க முடியாதுப்பா...என பேச வைத்தது. அதில் முழு நிர்வாணமாகவும் நடித்து இருப்பார். 2014ல் வெளியான தசாவதாரம் படத்தில் கமல் பயங்கர வில்லனாக நடித்து இருப்பார். 

    காயத்ரி, நெற்றிக்கண் ஆகிய படங்களில் மாறுபட்ட வில்லனாக நடித்து இருப்பார். 16 வயதினிலே படத்திலேயே வில்லத்தனத்தைக் காட்டி நகைச்சுவை கலந்து நடித்திருப்பார். கமல் நடிப்பில் வெளியான பல படங்களில் ரஜினிக்கு வில்லன் வேடம்தான். மூன்று முடிச்சு, அலாவுதீனும், அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை போன்ற பல படங்களில் ரஜினிக்கு வில்லன் வேடம் என்றாலும் அவர் தனக்கே உரிய தனி ஸ்டைலால் படத்தில் ரசிகர்களை கவரச் செய்து விடுவார்.

    சத்யராஜ் அமைதிப்படையிலும், ரஜினி எந்திரனிலும் வில்லனாக நடித்து அசத்திருப்பார்கள். செந்தாமரை மூன்று முகம் படத்தில் வில்லனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார். மன்சூர் அலிகான் கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து பிரமிக்க வைத்திருப்பார். நாசர் கமலின் தேவர் மகன் மற்றும் குருதிப்புனல் படத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். இவ்வளவு ஏன் நகைச்சுவை நடிகர் நாகேஷ் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் காட்டியிருக்கும் வில்லத்தனம் நமது கண்களை அகல விரிய வைத்ததே...! என்ன ஒரு வில்லத்தனம்...என்று..?!

அஜீத் கதாநாயகனாக நடித்த ஆசை படத்தில் சைலண்ட் வில்லனாக நடித்து புது முத்திரை படைத்தவர் பிரகாஷ்ராஜ். அவரே விஜயுடன் கில்லியில் அதிரடி வில்லனாக நடித்து தூள் கிளப்பியிருப்பார்.

     தனுஷ் நடித்த அநேகன் படத்தில் கார்த்திக் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். விஜய்சேதுபதி விக்ரம் வேதா, ரஜினியின் பேட்ட படங்களில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து கதாநாயகனுக்கு சரிசமமான பேரைத் தட்டிச் சென்றிருப்பார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் அஜீத்குமார் எந்த வேடத்திலும் அசால்டாக நடித்து அசத்தி 'தல" என்ற பெயரைப் பெற்றுள்ளார். அவர் நடித்த வில்லன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருப்பார். விஸ்வாசம் படத்தில் 'நான் ஹீரோ இல்லடா...வில்லன்டா..."என பேசி மிரட்டியிருப்பார். 

    தற்போது வரும் படங்களில் வில்லன்கள் வித்தியாசமான ரோலில் நடித்;து வர ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த நட்டியின் நடிப்;பைப் பார்த்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவரை போனில் அழைத்து, 'என்ன பாடி லாங்குவேஜ்டா...பிரமாதம்டா....'என பாராட்டியுள்ளார்.  
 

From around the web

Trending Videos

Tamilnadu News