200க்கு வாங்கி 1000 ரூபாய்க்கு வித்தவங்கதான நீங்க!.. விஜய் ரசிகர்களுடன் தியேட்டர் ஊழியர்கள் வாக்குவாதம்!..
ஒவ்வொரு முறையும் நடிகர் விஜயின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் ரசிகர் மன்றத்திற்காக ஒதுக்கப்படும். அந்த பகுதி ரசிகர் மன்ற நிர்வாகி தியேட்டர் நிர்வாகத்திடம் ஒரு குறிப்பிட்ட விலைக்கு மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கி அதை சில மடங்கு லாபம் வைத்து விஜய் ரசிகர்களுக்கு விற்பது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. அதனால்தான் விஜய் அரசியலுக்கு வந்த போது தனது படத்தில் பிளாக் டிக்கெட்டையே தடுக்காதவர் எப்படி ஊழலை தடுப்பார் என திமுகவினர் கேள்வி எழுப்பினார்கள்..
நடிகர் விஜய் தற்போது தமிழக முதலமைச்சராக மாறியுள்ள நிலையில் அவர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23ம் தேதியான நாளை தமிழகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஆனால் வழக்கம் போல ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றால் அது முதல்வர் விஜய்க்கும், அரசுக்கும் கெட்ட பெயரை உருவாக்கும் என்பதால் தியேட்டரில் டிக்கெட் கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும்.. அதுவும் அரசு நிர்ணயத்தை விலையில் மட்டுமே டிக்கெட் விற்கப்படவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது
. ஆனாலும், சின்ன ஊர்களில் உள்ள தனித்தியேட்டர்களில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 200 முதல் 250 வரை டிக்கெட்டுகளை விற்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால், பெரிய நகரங்களில் டிக்கெட் 500 முதல் 800 வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் தியேட்டர் நிர்வாகமே 500 முதல் 800 வரை டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு ‘கம்பெனிதான் அப்படி விற்க சொன்னது.. விநியோகஸ்தர் தான் அப்படி விற்க சொன்னார்.. அவர்களிடம் போய் கேளுங்கள்.. எங்களிடம் 200 ரூபாய்க்கு வாங்கி 1000 ரூபாய்க்கு விற்றவர்கள்தானே நீங்கள்.. இதைப்பற்றி எல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது’ என தியேட்டர் நிர்வாகிகள் விஜய் ரசிகர்களிடம் வாக்குவாதம் செய்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.. விஜய் ரசிகர்களோ ‘காலையில் வாருங்கள் 300 ரூபாய்தான் டிக்கெட் விலை என்று சொன்னார்கள். இப்போது வந்தால் 500, 800 என்கிறார்கள்’ என புலம்பி வருகிறார்கள்.
