பிடிவாரன்டே பிறப்பிக்கப்படவில்லை... பொய் செய்தி... கொதிக்கும் ஷங்கர்

எந்திரன் கதை தொடர்பாக எழுத்தாளர் ஆரூர் நாடன் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு நீதிமன்றம் ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பதாக செய்திகள் றெக்கை கட்டின. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதற்கு இயக்குனர் ஷங்கர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக ஷங்கர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரன்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார். இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.