Categories: Cinema News latest news throwback stories

இப்படி எழுதினா நான் பாட மாட்டேன்!.. கண்ணதாசனிடம் மல்லுக்கட்டிய டி.எம்.எஸ்..

திரையுலகில் பல ஆயிரம் பாடல்களை பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு இவர்தான் அனைத்து பாடல்களையும் பாடுவார். காதல், சோகம், தத்துவம், அறிவுரை என அனைத்து சுழ்நிலைகளுக்கும் தனது குரலால் ரசிகர்களை வசியம் செய்தவர் இவர்.

எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் குரலை மாற்றி பாடுவதில் வித்தகர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு மட்டுமின்றி நாகேஷ், முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலருக்கும் இவர் பல பாடல்களை பாடியுள்ளார். டி.எம்.எஸ் பாடிய பெரும்பாலான பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி எழுதியதுதான்.

எம்.எஸ்.வி இசையமைக்க, கண்ணதாசன் பாடல் எழுத, டி.எம்.எஸ் அந்த பாடலை பாட என பல அற்புதமான பாடல்கள் அந்த காலத்தில் உருவாகி ரசிகர்களை உருக வைத்தது. இப்போதும் அந்த பாடல்கள் பலரின் பிடித்தமான பாடலாக இருக்கிறது.

அதே சமயம், சில நேரங்களில் பாடல்களை உருவாக்கும்போது எம்.எஸ்.வி – கண்ணதாசன் – டி.எம்.எஸ் ஆகியோருக்கிடையே பல கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் வந்ததுண்டு. எம்.எஸ்.வி கூறிய ஒரு விஷயம் கண்ணதாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தும். அதேபோல், சில விஷயங்களில் டி.எம். சவுந்தரராஜனும் கோபப்படுவார். இறுதியில் அது எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல பாடலும் உருவாகும்.

TM.Soundararajan

1963ம் வருடம் வெளிவந்த திரைப்படம் ‘வானம்பாடி’. இப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்’ என்கிற பாடல் உண்டு. இந்த பாடலை எழுதிய கண்ணதாசன் ‘அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்’ என்றுதான் முதலில் எழுதியிருந்தாராம்.

kannadhasan

அந்த பாடலை பட வந்த டி.எம்.எஸ் தீவிரமான கடவுள் நம்பிக்கை உடையவர். ‘கடவுள் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்?.. கடவுள் சாக வேண்டும் என எழுதியிருக்கிறீர்கள். கடவுளுக்கு ஏது மரணம்?.. அந்த வரியை மாற்றிக்கொடுங்கள்.. இல்லையேல் நான் இந்த பாடல் பாட மாட்டேன்’ என சொல்லிவிட அவர் சொல்வதை ஏற்றுக்கொண்ட கண்ணதாசன் ‘அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்’ என மாற்றிக்கொடுத்தாராம்.

Published by
சிவா